இந்தோனேசிய நிலநடுக்கம்: இதுவரை மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை – விஸ்மா புத்ரா

புத்ராஜெயா, நவம்பர் 23 :

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் 10 கி.மீ. ஆழத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் இதுவரை மலேசியர்கள் யாரும் சிக்கவில்லை என்று விஸ்மா புத்ரா நேற்று உறுதிப்படுத்தியது.

மலேசியர்கள் யாரேனும் தூதரக உதவி தேவைப்பட்டால் அல்லது வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், அவர்கள் ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று விஸ்மா புத்ரா நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகத்தை பொது விசாரணைகளுக்காக      +62 21 5224947 என்ற எண்ணிலும், அலுவலக நேரத்திற்குப் பின்னர் அவசர விஷயங்களுக்காக +62 813 8081 3036 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

ஜகார்த்தாவில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு ஜாவாவில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 1.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன்படி, இதுவரை மொத்தம் 268 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் 151 பேர் காணாமல்போயுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. இதில், பெருமளவில் குழந்தைகளே உயிரிழந்து உள்ளனர். மேலும் இதனால் 2,200 வீடுகள் சேதமடைந்து உள்ளன. இதுவரை 5,300-க்கும் கூடுதலான மக்கள் பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என இந்தோனேசிய பேரிடர் மீட்பு கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here