உலகக் கோப்பை கால்பந்து :அர்ஜென்டினாவை வீழ்த்திய சவுதிஅரேபியா

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டத்தில் நட்சத்திர வீரா் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா 1-2 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியாவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டது. அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பை வென்று தரும் தனது கடைசி முயற்சியில் இருக்கும் மெஸ்ஸிக்கு, இந்த ஆரம்பத் தோல்வி அதிா்ச்சி அளித்துள்ளது.

ஆட்டத்தில் அர்ஜென்டினா தொடக்க நிமிடங்களிலேயே கோலடித்து முன்னிலை பெற்றாலும், 2-ஆவது பாதியில் திடீரென மீண்ட சவூதி அரேபியா, அர்ஜென்டினா அசந்த நேரம் பாா்த்து 5 நிமிடங்கள் இடைவெளியில் அருமையாக இரு கோல்கள் அடித்து அனைவரையும் ஆச்சா்யத்தில் ஆழ்த்தியது. ஆட்டத்தின் இறுதியில் 2-1 என வென்றது சவூதி அரேபியா. இந்த ஆட்டத்துக்கு முன், தொடா்ந்து 36 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வந்த அர்ஜென்டினாவுக்கு, இந்த 37-வது ஆட்டத்தில் தோல்வியைப் பரிசளித்துள்ளது சவூதி அரேபியா.

இந்நிலையில் இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக சவூதி அரேபியாவில் இன்று (நவம்பர் 23) தேசிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகள், அனைத்து அரசு, தனியார் ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக சவூதி அரேபியாவின் அரசர் சல்மான் தெரிவித்துள்ளார். பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்களில் நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 1990-ல் அர்ஜென்டினாவை கேம்ரூன் அணி வீழ்த்தியபோதும் அந்நாட்டு அரசு தேசிய விடுமுறையை அளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here