புக்கிட் பிந்தாங் சொகுசு விடுதியில் அதிரடி சோதனை: ‘மக்காவ் ஸ்கேம்’ தொடர்பில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் அதிரடி கைது!

கோலாலம்பூர்:

தலைநகர் புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் இயங்கி வந்த சட்டவிரோத கேளிக்கை விடுதி ஒன்றில், இன்று அதிகாலை 1 மணியளவில் குடிநுழைவுத் துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். அதிகாரிகளால் நுழைய முடியாது என்று கருதப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட அந்த மையத்தில் நடத்தப்பட்ட இந்த வேட்டையில், நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

சுமார் இரண்டு வார கால உளவுத் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சோதனையின் போது, சீன நாட்டு ஆண்கள் மற்றும் வியட்நாம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெண் விருந்தோம்பல் உதவியாளர்கள் (GRO) பலர் போதைப்பொருள் மயக்கத்தில் இருந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

அங்கிருந்து கெட்டமின் (Ketamine) உள்ளிட்ட போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா மற்றும் மாணவர் விசாக்களைத் தவறாகப் பயன்படுத்தி இங்கு பணிபுரிந்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இவர்கள் சர்வதேச அளவில் தேடப்படும் ‘மக்காவ் ஸ்கேம்’ (Macau Scam) போன்ற நிதி மோசடி கும்பல்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தற்போது குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களின் முழு விவரங்கள் மற்றும் இந்தச் சோதனையின் மேலதிக முடிவுகள் குறித்து, குடிநுழைவுத் துறை இன்று பிற்பகல் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here