விடுதி ஒன்றின் 12வது மாடியில் இருந்து விழுந்து, தனித்து வாழும் தாய் ஒருவர் மரணம்

மலாக்கா, டிசம்பர் 6 :

இங்குள்ள தாமான் மலாக்கா ராயாவில் உள்ள விடுதி ஒன்றின் 12வது மாடியில் இருந்து விழுந்து, பெண் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார்.

காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், தலையில் இரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்த உயிரிழந்தவரின் சடலத்தை பொதுமக்கள் கண்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் கிறிஸ்தோபர் பாடிட் தெரிவித்தார்.

தகவல் கிடைத்ததும் பண்டா ஹிலிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழு, காலை 10.52 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தியதாக அவர் மேலும் கூறினார்.

அவரது கூற்றுப்படி, விடுதியிலிருந்து கண்காணிப் கேமரா (சிசிடிவி) காட்சிகளை மதிப்பாய்வு செய்ததில், பாதிக்கப்பட்டவர் அங்கு தங்கியிருந்த விருந்தினர் அல்ல, மாறாக காலை 10.23 மணியளவில் அவர் விடுதி வளாகத்திற்கு வந்தார் என்றும் அறியப்படுகிறது.

“குறித்த பெண் பின்னர் 12 வது மாடிக்கு சென்றார், ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, அவர் கீழே குதித்ததாக நம்பப்படுகிறது.

“முதற்கட்ட விசாரணையில் இறந்த பெண்மணி சுகாதாரப் பொருட்கள் விற்பனையாளராக இருந்தவர் என்றும், கோவிட்-19 க்கு பின்னர் அவர் வேலை இழந்ததாகவும் அறியப்படுவதுடன் அவர் ஒரு தனித்து வாழும் தாய் என்றும் அவருக்கு நிதிப் பிரச்சனைகள் இருப்பதாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கிறிஸ்தோபர் மேலும் கூறுகையில், சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டதில், அங்கு குற்றச் செயல்கள் எதுவும் நடந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதைக் கண்டறிந்தனர். அத்தோடு இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here