ஷா ஆலாம், டிசம்பர் 7 :
புக்கிட் கெராயோங் பகுதியில் மலையை சமப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நில உரிமையாளர்கள் அவற்றை உடனடியாக நிறுத்துமாறும், திட்ட அனுமதிக்கு (KM) விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறும் குறிப்பிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையை, கிள்ளான் நகராண்மைக் கழகம் வெளியிட்டுள்ளது.
மாநில உள்ளாட்சி, பொதுப் போக்குவரத்து மற்றும் புதிய கிராம மேம்பாட்டுக் குழுத் தலைவர் Ng Sze Han கூறுகையில், புக்கிட் கெராயோங் பகுதியில் கிள்ளான் நகராண்மைக் கழகம் தளக் கண்காணிப்பை மேற்கொண்டதாகவும், மலையை சமன் செய்யும் நடவடிக்கைகள் எட்டு நிலங்களில் மேற்கொண்டதை அது கண்டறிந்ததாகவும் கூறினார்.
“நகரம் மற்றும் கிராம திட்டமிடல் சட்டம் 1976 இன் பிரிவு 19 இன் கீழ், அந்தந்த நில உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவிப்பை புறக்கணிக்கும் நில உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று, நேற்று நடந்த சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் Ng கூறினார்.
புக்கிட் கெராயோங், புக்கிட் கபார் மற்றும் புக்கிட் செராக்கா ஆகிய மூன்று மலைகளை சமன் செய்வது தொடர்பான மாநில அரசின் நடவடிக்கை குறித்து, டாக்டர் தரோயா அல்வியின் (PBM-செமெந்தா) கேள்விக்கு Ng இமேற்கண்டவாறு பதிலளித்தார்.