பக்தி பரவசத்துடன் மலாக்கா மாச்சாப் கருப்பர் ஆலய திருவிழா; 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அணி திரண்டு விழா கோலம்

(ரெ. மாலினி)

மலாக்கா:

கடந்த வெள்ளி, சனி ,ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் நடைபெற்ற மாச்சாப் தோட்டம் ,மலாக்காவில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகா கருமாரியம்மன் ,கருப்பர் ஆலயம் வருடாந்திரா திருவிழாவில் 20,000 மேற்பட்ட பக்தர்கள் நாடு தழுவிய நிலையிலிருந்துக் கலந்துக் கொண்டனர்.

30 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சியளிக்கும் 18ஆம் படி கருப்பர் சுவாமியை தரிசித்து ஆசிப் பெற இம்முறை அதிகமான பக்தர்கள் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்தனர்.

பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற கருப்பர் மஹா யாகம், அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மஹா அபிஷேகத்தை பக்தர்கள் மன நிறைவுடன் கண்டு மனம் குளிர்ந்தனர். யாகம் பூர்த்தி அடையும் தருவாயில் கருப்பரின் ஆசிர்வாதம் வானத்திலிருந்து மழை தூவானம் துளிகளாக வீழ்ந்ததில் பக்தர்களில் பலர் கண்கலங்கி நின்ற காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.

மறுநாள் சனிக்கிழமை இரவு ஆற்றங்கரையிலிருந்து சக்திக்கரகம் ஏந்தி வரப்பட்டு 20க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பெரிய அழகிய பல்லாக்கில் அம்பாளை ஏந்தி ஆலயத்தைச் சுற்றி ஊர்வலம் வந்தனர்.

திருவிழா அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி தொடக்கம் பக்தர்கள் பால் குடங்கள் ,காவடிகள், தீச்சட்டியை ஏந்தி தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். விஷேச அபிஷேச ஆராதனைகளுடன் திருவிழா விமரிசையாக தொடங்கியது. ஆலயத் தலைவர் குமரன் மற்றும் ஆலோசகர் அன்பழகன் தலைமையில் ஆலயத் திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. இவ்வாலயம் வெறும் ஆலயமாக மட்டும் இல்லாமல் நற்சேவைகளையும் உயர்ந்த நெறிகளையும் போதிக்கும் பள்ளிக்கூடமாக விளங்க வேண்டும் என்பதே ஆலயத்தில் குறிக்கோளாக விளங்குகிறது . வருங்காலத்தில் இவ்வாலயம் மாபெறும் மக்கள் சேவை மையமாக விளங்கும் என்று அன்பழகன் கூறினார்.

THR புகழ் மாறன் வருகை தந்து மேடை நிகழ்ச்சியை மிக சிறப்பாக பேசி அனைவரையும் கவர்ந்தார். ஆசிரியர் குணசேகரன் தனக்கே உரிய பாணியில் பேசி பக்தர்களை வழி நடத்தினார்.

திருவிழாவில் தேசிய ம.இ.கா உதவித் தலைவர், அசோஜன், மத்திய செயலவை உறுப்பினர்கள் இரா. தினாளன், ஏன்று டேவிட் , காடேக் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ சண்முகம். மாச்சாப் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ செம், அலோர்காஜா தொகுதித் தலைவர் டத்தோ கே.ராஜன் , மலாக்கா மாநில ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் அன்பழகன் , மலாக்கா போலீஸ் தலைமையக குற்றப்புலணய்வு துறை தலைவர் சுப்ரிண்டெண்டன் சுந்தராஜன் ஆகியோர் சிறப்பு பிரமுகர்களாக கலந்துக் கொண்டனர்.

பிற்பகல் 1.30 மணிக்கு ஆலயத் தீமிதி உற்வசம் மிக அமைதியான முறையில் நடைபெற்றது. அதிர்ஷ்ட குழுக்கள் நிகழ்ச்சியில் முதல் பரிசான தங்கச் சங்கிலியை அலோர்காஜாவைச் சேர்ந்த அன்பர் ஒருவர் வென்றார். ஆலயத் திருவிழாவில் கருப்பர் லட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டதோடு பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்ட இரு குதிரைகள் கருப்பர் சன்னதி முன் நிறுத்தி வைக்கப்பட்டு மேலும் சிறப்பை சேர்த்தது.

இரவு 8.00 மணிக்கு அழகிய வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட இரத்தில் அப்பாள் மாச்சாப் தோட்டம் வழியாக வந்து பிறகு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று பக்தர்களுக்கு அருள் காட்சி தந்து நள்ளிரவுக்குப் பிறகு ஆலயத்தை வந்தடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here