கோத்தா பெலூட்டின் பிரபலமான ஆற்றங்கரையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத்தொடர்ந்து, அப்பகுதியில் விடுமுறைக்கு வந்து முகாமிட்டிருந்த 25 பேர் கொண்ட குழுவினரை தீயணைப்பு வீரர்கள் இன்று மீட்டனர்.
கனமழை காரணமாக கோத்தா பெலூட்டில் உள்ள பொலும்புங் மெலாங்காப் வியூ கேம்ப் தளத்திற்குச் செல்லும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால், அங்கு பொழுதுபோக்கு நடவடிக்கைக்காக முகாமிட்டிருந்த 5 ஆண்கள், சிறுமிகள் உட்பட 20 பெண்கள் அனைவரும், இன்று காலை 7.30 மணியளவில் போலம்புங் பொழுதுபோக்கு மையத்திலிருந்து ஆற்றின் குறுக்காக உள்ள இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர் என்று, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
நேற்று மாலை 6 மணி முதல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அந்த குழு முகாமில் சிக்கியதாக கிடைக்கப்பெற்ற தகவலின்பேரில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அந்த இடத்திற்கு விரைந்தது என்று அவர் மேலும் கூறினார்.