செப்பாங்கில் காணாமல் போனதாக தேடப்பட்ட 13 வயது சிறுமி ஷா ஆலாமில் பாதுகாப்பாக மீட்பு; பெண் உட்பட மூவர் கைது

செப்பாங்:

கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி, இங்குள்ள தாமான் சாலாக் மாஜூவில் உள்ள தங்குமிடத்தை விட்டு வெளியேறிய பதின்ம வயது சிறுமி, காணாமல் போனதாகக் கூறப்பட்ட வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒரு பெண் உட்பட மூன்று நபர்களை போலீசார் கைது செய்ததுடன், சிறுமியையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

செக்க்ஷன் 13, ஷா ஆலாமிலுள்ள ஒரு சொகுசுமாடிக் குடியிருப்பிலுள்ள ஒரு வீட்டுப்பிரிவில் மேற்கொண்ட சோதனையில், முறையே 19 மற்றும் 18 வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டதாக செப்பாங் மாவட்ட காவல்துறை தலைவர், உதவி ஆணையர் வான் கமாருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்தார்.

“அதே வீட்டுப்பிரிவில் இருந்த காணாமல்போன 13 வயது சிறுமியையும் நாங்கள் காப்பாற்ற முடிந்தது” என்று அவர் மேலும் கூறினார்.

“நேற்று இரவு 9.30 மணியளவில் ஷா ஆலாம் பிரிவு 13 இல் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் மற்றொரு 21 வயது இளைஞனையும் நாங்கள் கைது செய்தோம்,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவர்களிடமிருந்து மூன்று கையடக்கத் தொலைபேசிகள், சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் யமஹா R15 மோட்டார் சைக்கிள், இரண்டு சட்டைகள், இரண்டு கால்சட்டைகள் மற்றும் ஹெல்மெட் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றியதாக வான் கமாருல் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் 361வது பிரிவின்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என்றார்.

முன்னதாக, கடந்த டிசம்பர் 25 அன்று தாமான் சாலாக் மாஜூவில் உள்ள ஹோம்ஸ்ரேயை விட்டு வெளியேறிய 13 வயதான சல்சாபிலா புத்ரி மாட் நசீர் என்ற இளம்பெண் காணாமல் போனதாக, புகார் கிடைத்ததாக போலீஸ் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here