அமெரிக்காவில் பனிப்புயல்: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குளர்காலத்தில் பனிபுயல் வீசுவது வழக்கம். பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகர சாலைகள் அனைத்தும் பனி மூடிக்கிடக்கிறது. குறைந்தபட்சம் சுமார் 25 சென்டி மீட்டர் உயரத்திற்கு சாலைகளை பனி மூடிக்கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களும் பனியால் மூடப்பட்டு நகரமே வெண்பனி மூட்டமாக காணப்பட்டது.

வெப்ப நிலை பூஜியத்திற்கும் கீழ் சென்றதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடி மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் கடுமையான பனிபுயல் வீசி வருகிறது. இதன் காரணமாக ஆம்புலன்சு வாகனங்கள் கூட சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பனிபுயலில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்தது. மேலும் பனிபுயல் கடுமையாக தாக்கிய பகுதிகளுக்கு மீட்பு படையினர் சென்று அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகிறார்கள். மேலும் பனி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் பிணங்களையும் மீட்டு வருகிறார்கள்.

நியூயார்க்கின் பப்பேலா பகுதியில் பனி கட்டிகளுக்கு அடியில் ஏராளமான பிணங்கள் புதைந்து கிடந்தன. அவற்றை மீட்பு குழுவினர் மீட்டனர். பனிபுயலில் சிக்கி இதுவரை பொதுமக்கள், பெண்கள் உள்பட 60 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற பனிபுயல் வீசியதில்லை என்று கூறப்படுகிறது. பனிபுயல் காரணமாக அமெரிக்காவில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்களின் ஓடுபாதையில் சுமார் ஒரு மீட்டர் அளவுக்கு பனி படிந்து இருப்பதால் விமானங்கள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதன்காரணமாக பல தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை ரத்து செய்தது. சவுத்வெஸ்டு நிறுவனம் மட்டும் சுமார் 2497 விமான சேவைகளை ரத்து செய்ததாக கூறியுள்ளது. நேற்று மட்டும் 3410 உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்தன. அமெரிக்கா முழுவதும் மொத்தம் 15 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

அமெரிக்காவில் பனிபுயலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் நடந்த இந்த சோகச்சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பனிபுயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here