உலகப் புகழ்பெற்ற மலேசியத் தெருவரைபடக் கலாச்சாரம்

மலேசியாவின் கலை கலாச்சார அம்சங்கள் உலக அரங்கில் புகழ்பெற்றவையாகும். அதிலும் நம் நாட்டில் உள்ள தெரு வரைபடக் கலாச்சாரம் நமக்கு மிகவும் பரிட்சியமானது. தற்போது இந்த வரைபட கலாச்சாரம் நாடு தழுவிய அளவில் பரந்து விரிந்துள்ளது. மக்கள் நடமாடும் தெருக்களில் உள்ள சுவர்களில் பல வண்ணப் புகைப்படங்கள் வரையப்பட்டு அவை அந்தத் தெருக்களின் அழகை மேலும் மெருகூட்டுகின்றன. குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கு, தீபகற்ப மலேசியாவின் வட மாநிலங்களில் இந்த வரைபடங்கள் மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகின்றன.

கிள்ளான் பள்ளத்தாக்கு: சஃபாரி வரைபடங்கள்

கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலங்களானது பல தெரு வரைபடக் கலை கலாச்சாரத்திற்கு தாய்வீடாக விளங்குகிறது என்றால் அது மிகையாகாது. தற்போதைய, பழங்கால வரலாற்று நிகழ்ச்சிகளையும் மனிதர்களையும் நினைவூட்டும் வகையில் அந்தப் புகைப்படங்கள் இந்தச் சுவர்களில் வரையப்பட்டுள்ளன. எப்போதாவது சிலாங்கூரில் கிள்ளான் நகருக்குச் செல்லும்போது இந்த சஃபாரி வரைபடங்களைப் பார்வையிடத் தவறாதீர். மலேசியாவின் புகழ்பெற்ற விலங்குகளின் படங்கள் வண்ணமயமாக வரையப்பட்டுள்ளன. உள்நாடு மட்டுமல்லாது அனைத்துலக ரீதியில் புகழ்பெற்ற வரைபடக் கலைஞர்கள் இந்த வரைபடங்களுக்கு உயிரோட்டம் அளித்துள்ளனர். குறிப்பாக விலங்குகள் மட்டுமன்றி இயற்கை வளங்களையும் இந்த வரைபடத்தில் இணைத்தது மேலும் முத்தாய்ப்பாக அமைகின்றது. இந்த சஃபாரி வரைபடங்களைப் பார்வையிட எண்ணம் கொண்டிருந்தால் கிள்ளான் அரச நகரின் பாரம்பரிய நடைப்பயண அனுபவத்தைப் பெறுவதற்கு இந்த விசையை அழுத்தவும்.

கிள்ளான் பள்ளத்தாக்கு: கோலகுபுபாருவில் வாழ்வின் அனுபவத்தைச் சித்தரிக்கும் கைவண்ணம்

சிலாங்கூர் மாநிலத்தின் வட பகுதியில் அமைந்துள்ள கோலகுபுபாரு பகுதிக்குச் செல்லும்போது 40 அல்பா அனைத்துலக கல்லூரி மாணவர்களின் கைவண்ணத்தைப் பார்வையிட மறவாதீர். வாழ்வின் அனுபவங்களைச் சித்தரிக்கும் இந்த வரைபடங்களில் கோலகுபுபாருவில் அன்றாட நிகழ்வுகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. முன்னதான நான்கு வரைபடங்கள் இங்கு இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த மாணவர்கள் வந்து மேலும் எட்டு வரைபடங்களை வரைந்துள்ளனர். உள்ளூர் உணவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய இந்த வரைபடங்கள் நமது சிறு வயது நினைவுகளை நினைவூட்டும்.

கிள்ளான் பள்ளத்தாக்கு: ஜாலான் அலோர் புக்கிட் பிந்தாங்

நாட்டின் தலைநகராக விளங்கும் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் பிந்தாங் பகுதியில் கண்கவர் வண்ணம் தெரு வரைபடங்கள் அமைந்துள்ளன. புக்கிட் பிந்தாங், எம்ஆர்டி விரைவு ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள ஜாலான் அலோர் முன்னதாக சர்ச்சைக்குரிய இடமாகக் கருதப்பட்டது. ஆனால் கோலாலம்பூர் மாநகர் மன்றத் தரப்பு அந்தத் தோற்றத்தை மாற்றி அமைக்க அங்கு தெரு வரைபடங்களை வரைந்துள்ளது. தற்போது ஜாலான் அலோர், புக்கிட் பிந்தாங் பகுதியில் மக்கள் அதிகம் பார்வையிட வரும் இடமாக விளங்குகிறது.

கிள்ளான் பள்ளத்தாக்கு: வாய் சாங் ஹோங்

தலைநகரில் உள்ள லோரோங் பங்கோங் பகுதியில் 19ஆம் நூற்றாண்டின் நினைவலைகளைத் தாங்கி தெரு வரைபடங்கள் உள்ளன. இங்கு காஃபே, பார் போன்ற பொழுதுபோக்கு மையங்கள் மட்டுமன்றி இந்த வரைபடங்களும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதிலும் அங்குள்ள ஒவ்வொரு வரைபடத்திலும் கியூஆர் முத்திரை வைக்கப்பட்டுள்ளது. அதனை நாம் விவேகக் கைப்பேசியில் ஸ்கேன் செய்து அந்த வரைபடங்களின் பின்புலக் கதையைப் படித்து அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here