வார இறுதியில் கண்டு களிக்க சுவாரஸ்ய இடங்கள்

வௌ்ளிக்கிழமை வந்துவிட்டால் அந்த வார இறுதி விடுமுறையை எங்கு கழிக்கலாம் என்ற சிந்தனை பலருக்கும் ஏற்படும்.மலேசியாவைப் பொறுத்தவரையில் அழகான, சுவாரஸ்யமான பல இடங்கள் வார இறுதி விடுமுறையை நீங்கள் கழிப்பதற்காக காத்திருக்கின்றன.

அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்:

  1. டாப் பினாங்கு உல்லாசப் பூங்கா, பினாங்கு

THE TOP PENANG THEME PARK, PENANG

பினாங்கு மாநிலத்தின் மிக உயர்ந்த கட்டடம் கொம்தார். அந்தக் கட்டடத்தின் உச்சியில் மிகப் பெரிய உள் அரங்கு, உல்லாசப் பூங்கா அமைந்திருக்கிறது. சுற்றுப் பயணிகள் அதிகம் செல்லாத இடமாக இது கருதப்படுகிறது. மறைவாக இருந்தாலும் வருகை தருபவர்களின் மனங்களில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் வகையில் பல அம்சங்கள் இங்கு காத்திருக்கின்றன.அகண்ட வானத்தைக் கண்டுகளிக்கும் வண்ணம் நடைப் பாதை, ஜுராசிக் ஆய்வு மையம்,  தொழில் நுட்பக் கோபுரம் போன்ற அம்சங்கள் சுற்றுப் பயணிகளை நிச்சயம் கவரும்.68ஆவது மாடியில் உள்ள உணவகத்தில் உணவருந்திக் கொண்டே ஜோர்ஜ் டவுன் நகரின்  வானளாவிய கட்டடங்கள், பரந்து விரிந்த கடல் ஆகிய அழகிய காட்சிகளைக் கண்டுகளிக்கலாம்.

  1. நகருக்குள் ஒரு விவசாயப் பண்ணை, ஸ்ரீகெம்பாங்கான், சிலாங்கூர்

FARM IN THE  CITY, SERI KEMBANGAN, SELANGOR

நகரின் பரபரப்புக்கும் வாகன நெரிசலுக்கும் இடையில்  பசுமை குலுங்கும் விவசாயப் பண்ணையின் மறக்க முடியாத அனுபவத்தைப் பெற வேண்டுமா?வாருங்கள் ஸ்ரீகெம்பாங்கானில் அமைந்திருக்கும்  விவசாயப் பண்ணைக்கு.அழகான  தாவரங்களுடன் பசுமையான சுற்றுச்சூழலில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இங்குள்ள விலங்கியல் காட்சியகம், நூற்றுக்கும் மேற்பட்ட அழகான, அபூர்வமான விலங்குகளைக் கொண்டிருக்கிறது.கண்ணாடிக் கூண்டுகளுக்குள் இருக்கும் விலங்குகளோடு திறந்த வெளியிலும் உலா வரும் விலங்குகளையும் பார்க்கலாம். அவற்றை மிக நெருக்கத்தில் பார்க்கலாம் என்பது இன்னொரு சுவாரஸ்யம்.அந்த விலங்குகளுக்குப் பிடித்த  உணவுகளை அளித்தும்  நீங்கள் மகிழலாம். அதிக எண்ணிக்கையிலான செல்லப்பிராணிகளைக் கொண்ட விலங்கியல் காட்சியகம் என்ற பதிவையும் மலேசிய சாதனைப் புத்தகத்தில் இந்த விவசாயப் பண்ணை பெற்றிருக்கிறது.

  1. ஜண்டா பாய்க், பகாங்

JANDA BAIK, PAHANG

நகரவாசிகள் வார இறுதியில் ஓய்வெடுப்பதற்கு  நாடி செல்லும் அழகிய இலக்குகளில் ஒன்று ஜண்டாபாய்க்.கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 45 நிமிடங்களில் இந்த அற்புதமான அழகு கொண்ட பிரதேசத்தை அடையலாம். இங்கு கணிசமான எண்ணிக்கையில் தங்கும் விடுதிகளும்  விடுமுறை இல்லங்களும்  அமைந்திருக்கின்றன.அவற்றைச் சுற்றி அடர்ந்த காடுகளுடன் கூடிய பசுமையான சூழல் உங்களைக் கவரும். தங்குவதோடு மட்டுமல்லாமல் காட்டுப் பகுதிகளில் நடைபயில்வது, வில்அம்பு விடுவது, சுற்றுலா போவது போன்ற வெளிப்புற நடவடிக்கைகளிலும் நீங்கள் ஈடுபடலாம்.

  1. சுங்கை கிளா, வெந்நீர் நீரூற்று, பேராக்

Sungai Klah Hot Springs, Perak

இயற்கைச் சூழலை விரும்பும் அனைவருக்குமான இடம் இது. அடர்ந்த பசுமையான  மரங்களையும் தாவரங்களையும் கொண்டிருக்கும்  இந்த இடத்தில் மனதை அமைதிப் படுத்தும் ஆறுகளின் நீரோட்டமும் உண்டு. குடும்பத்தினருடன் சென்று இங்குள்ள நீரூற்றின் வெந்நீர் குளியலில் நீங்கள் மகிழ்ச்சி அடையலாம். பரபரப்பான நகர வாழ்க்கையினால் ஏற்படும் மன உளைச்சலைத் தணிக்கவும் மீண்டும் நம்மை உற்சாகப்படுத்திக் கொள்ளவும் இங்குள்ள நீர் பூங்கா உதவும்.இங்குள்ள வெந்நீர் நீரூற்றில் முட்டைகளை அவித்துப் பார்ப்பதும் ஓர் அனுபவமே! இதற்கான பாத்திரங்களும், கூடைகளும் உங்களுக்கு வழங்கப்படும்.நீரின் வெப்ப அளவு100 சென்டிகிரேட்டைத் தொடக்கூடும் என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here