கோலாலம்பூர்:
கடந்தாண்டு டிசம்பர் 16-ம் தேதி, பத்தாங் காலியில் உள்ள Father’s Organic Farm campsite, கோதோங் ஜெயாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் பொருட்களைத் திருடிய சந்தேகத்தின் பேரில் அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிலாங்கூர் காவல்துறையின் பதில் தலைவர், டத்தோ எஸ்.சசிகலா தேவி தெரிவித்தார்.
27 வயதான சந்தேக நபர் நேற்று கிள்ளான் பள்ளத்தாக்கில் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்தமானது என்று நம்பப்படும் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்,” என்றும் அவர் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் 379வது பிரிவின் கீழ், சந்தேக நபரை விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிடக்கோரி, போலீசார் நீதிமன்றத்தில் விண்ணப்பிப்பதாக சசிகலா கூறினார்.
இதற்கு முன்னதாக, நிலச்சரிவில் பலியானவர்களில் ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர், பொறுப்பற்ற நபர்கள் Touch ‘n Go கார்டைப் பயன்படுத்துவதாகக் கூறி , பேஸ்புக்கில் பதிவிட்டதாகக் கருதப்படும் ஒரு பதிவை போலீசார் கண்டுபிடித்ததாக, உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுஃபியன் அப்துல்லா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாலை 2.46 மணியளவில் ஏற்பட்ட குறித்த நிலச்சரிவில் 31 பேர் பலியாகினர், மொத்தம் 61 பேர் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.