நேபாள விமான விபத்து: 16 வெளிநாட்டினர் உட்பட 72 பேர் பலி

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்றுக் காலை 10.33 மணிக்கு ‘எட்டி ஏர்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர்.

அந்த விமானம் காலை 11 மணிக்கு பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. பொக்காரா புதிய விமான நிலையம் கடந்த 1-ந்தேதி தான் திறந்து வைக்கப்பட்டது. விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது பழைய விமான நிலையத்துக்கும், புதிய விமான நிலையத்துக்கும் இடையே உள்ள சேட்டி நதிக்கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது.

இதற்கிடையே தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. நதிக்கரை மற்றும் மலைப்பிரதேசத்தில் விமானம் விழுந்ததால் உடனயாக மீட்பு பணிகளை தொடங்க முடியவில்லை.

இந்த நிலையில் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் போராடி விமானத்தில் பிடித்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே விமான விபத்து தொடர்பாக நேபாள அமைச்சரவையின் அவசர கூட்டத்துக்கு அந்நாட்டு பிரதமர் புஷ்பகமல் தகால் அழைப்பு விடுத்தார். அத்துடன் நாட்டின் உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. விமான விபத்தில் விமானத்தின் பாகங்கள் எரிந்து ஆங்காங்கே சிதறி காணப்பட்டது. மேலும் அதில் பயணம் செய்த பயணிகளின் உடல்களும் கருகியபடி ஆங்காங்கே காணப்பட்டது.

இந்த விமான விபத்தில் 68 பேர் இறந்ததாக முதலில் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது. விமானத்தில் இருந்த 68 பயணிகள், 4 ஊழியர்கள் என 72 பேருமே இறந்து விட்டதாகவும் யாரையும் உயிருடன் மீட்கவில்லை எனவும் அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்றது. இதற்கிடையே இரவானதால் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன. இன்று காலையில் மீண்டும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. இதுவரை 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மீதமுள்ளவர்களின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தில் நேபாளத்தை சேர்ந்தவர்களை தவிர வெளிநாட்டவர்களும் இருந்தனர். அவர்களில் 53 நேபாளிகள், 5 இந்தியர்கள், 4 ரஷியர்கள், 3 கொரிய நாட்டினர், அர்ஜென்டினா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தலா ஒருவர் விமானத்தில் இருந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, உடல்களை ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த விமான விபத்து சம்பவத்துக்கு நேபாள பிரதமர் புஷ்பகமல் தகால் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நேபாளத்தில் இன்று அரசு துக்கதினமாக அனுசரிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here