கோலாலம்பூர்:
உடல்எடைக் குறைப்புக்குத் தீர்வாகக் கருதப்படும் ‘ஓஸெம்பிக்’ மருந்து மீதான மோகம் உலகெங்கும் அதிகரித்துள்ள வேளையில், இந்த தாக்கம் மலேசியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீரிழிவைக் கட்டுக்குள் வைக்கப் பயன்படுத்தப்படும் அந்த மருந்துக்கான தேவை அதிகரித்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக இங்குள்ள மருந்துக்கடைகள் கூறுகின்றன.
‘ஓஸெம்பிக்’ மருந்துக்கான பற்றாக்குறை நிலவுவதாக மலேசிய மருந்தாளர்கள் சங்கத் தலைவர் அம்ராஹி புவாங் உறுதிச்செய்தார்.
இதற்கு காரணம் நீரிழிவு பாதிப்பு இல்லாதோரும் உடல் எடையைக் குறைப்பதற்காக அந்த மருந்தை நாடுவது என்றார் அவர்.
மேலும் மலேசியாவில் உடல் எடையைக் குறைப்பதற்கு ‘ஓஸெம்பிக்’ மருந்து அங்கீகாரம் பெறாத நிலையில் நீரிழிவு நோய் இல்லாத பலர் அதைப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் மருத்துவரின் கவனிப்பின்றி, ஒப்புதல் வழங்கப்படாத உடற்கோளாறுகளுக்கு மருந்துகளைப் பயன்படுத்துவது தவறு என்று அவர் எச்சரித்தார்.
‘ஓஸெம்பிக்’ மருந்தின் பக்க விளைவுகளில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை வெகுவாகக் குறைத்தலும் அடங்கும் என்று கூறிய அம்ராஹி, இதை தொடர்ந்து பாவித்தால் உயிருக்கு ஆபத்து நேரக்கூடும். எனவே தேவையற்ற பின்விளைவுகளைத் தடுக்க, மருந்துகளைச் சரியாகப் பயன்படுத்தும் விதம் குறித்துப் பொதுமக்கள் எப்போதும் மருந்தாளரை ஆலோசிப்பது அவசியம்,” என்றார் அவர்.





















