நெஞ்சுவலி என மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போதைப்பொருள் வழக்கின் கைதி மரணம்

ஜோகூர் பாருவிலுள்ள சுல்தானா அமினா (HSA) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதைப்பொருள் வழக்கின் கைதி (வெளிநாட்டவர்) ஒருவர், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

ஜோகூர் நகரில் உள்ள ஒரு குடியிருப்பில், நள்ளிரவு 12.10 மணியளவில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், RM2,850 மதிப்புள்ள 54.7 கிராம் கஞ்சா வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் குறித்த 49 வயது நபர் கைது செய்யப்பட்டதாக , ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ரவூப் செலாமாட் கூறினார்.

ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஆடவருக்கு, அதிகாலை 1.20 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் பின்னர் ஒரு ஆம்புலன்ஸ் உதவியுடன், அந்த நபர் சிகிச்சைக்காக HSA க்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்றும், ஆனால் அதிகாலை 2.27 மணிக்கு, சிகிச்சை அளித்த மருத்துவ அதிகாரி அந்த நபர் மரணமடைந்ததாக உறுதிப்படுத்தினார் என்று கூறினார்.

“அவர்களின் தந்தைக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக உயிரிழந்தவரின் புதல்வர்கள் உறுதி செய்தனர்” என்று, அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இருப்பினும் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய, பிரேதப் பரிசோதனை இன்று HSA இல் நடத்தப்பட உள்ளதாகவும், இதுவரை இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here