தென்மேற்கு பாகிஸ்தானில், 48 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலுசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கும் தெற்கு துறைமுக நகரமான கராச்சிக்கும் இடையே பேருந்து இரவோடு இரவாகப் பயணித்தது. அப்போது அங்கிருந்த ஒரு பாலத்தில் உள்ள தூணில் மோதி பேருந்து சாலையில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
இவ்விபத்துக்கான காரணம் சரியாக தெரியாத நிலையில், ஓட்டுநர் நீண்ட தூரம் பயணிக்கும் போது வேகமாகச் சென்றிருக்கலாம் என்றும், ஓட்டுநர் தூங்கிவிட்டதாகவும் நம்பப்டுவதாக லாஸ்பேலா மாவட்டத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஹம்சா அஞ்சும் கூறினார்.
எவ்வாறாயினும், காவல்துறை விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக கூறிய அவர், இந்த விபத்தில் உடல்கள் நசுங்கி உருக்குலைந்து போனதால், அவற்றை அடையாளம் காண முடியவில்லை என்றும், DNA பரிசோதனை மூலம் சடலங்கள் இனங்காணப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
சீரற்ற சாலைகள், மந்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொறுப்பற்ற வாகனம் ஓட்டுதல் ஆகியவை காரணமாக பாகிஸ்தானின் மோசமான சாலை விபத்துக்களை ஏற்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. –AFP