பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு; நடிகர் கமல்ஹாசன், இளையராஜா இரங்கல்

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்து உள்ளார் என கூறப்படுகின்றது. போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து உள்ளனர். வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், வார்த்தைகளுக்கு பதவி உயர்வு கொடுப்பது போன்றதொரு அரிய பாணியில் எத்தனையோ பாடல்களை உலகுக்கு பரிசளித்த பறவையாக வாழ்ந்த வாணி ஜெயராம் அம்மையார் அமைதியடைந்திருக்கிறார்.

அவர் பாடல்கள் நம்மிடம் இருக்கும். அவருக்கென் அஞ்சலி என தெரிவித்து உள்ளார். இதேபோன்று, வாணி ஜெயராம் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், வாணி ஜெயராம் மறைவு செய்தி கேட்டு துயருற்றேன். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here