துருக்கியே – சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 7,266 ஆக உயர்வு- இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது

துருக்கியேயின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கியே – சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியேயின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.5 ஆக பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் துருக்கியே – சிரியாவின் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியன.

இந்த கோர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், துருக்கியே – சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியேயில் 5,434 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 1,832 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,266 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்துவிழுந்துள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here