வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் (NSE) 334.4 ஆவது கிலோமீட்டரில் விபத்துக்குள்ளான டிரெய்லரின் பின்புறம் கார் மோதியதில், ஒரு மூதாட்டி உயிரிழந்தார்.
காலை 6.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 81 வயதான Ng Gim Chuang என்பவர் பலத்த காயமடைந்து, தாப்பா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார் என்று தாப்பா மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் வான் அசாருடின் வான் இஸ்மாயில் கூறினார்.
ஜோகூரில் இருந்து பெர்லிஸின் பாடாங் பெசார் நோக்கிச் சென்ற டிரெய்லர் விபத்துக்குள்ளாகி, சம்பவ இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
குறித்த இடத்தில் முன்னெச்சரிக்கையாக விபத்துக்குள்ளான டிரெய்லருக்குப் பின்னால் பாதுகாப்பு கூம்புகள் மற்றும் எச்சரிக்கை விளக்குகளை வைக்கப்பட்டிருந்தது.
“இருப்பினும், அதே திசையில் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து, டிரெய்லரின் பின்புறத்தில் மோதியது.
“இந்த விபத்தில், காரின் பின்பக்க பயணி பலத்த காயம் அடைந்து தாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும், ஆனாலும் அவசர சிகிச்சை பிரிவில் இன்று காலை 8.15 மணியளவில் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மருமகனாக 63 வயது கார் ஓட்டுநருக்கு எந்தக்காதமும் இல்லை என்றும், அவரது 55 வயது மகளுக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.
இவ்வழக்கு விசாரணை சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் படி நடத்தப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.








