அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பிற்கு போட்டியாக விவேக் ராமசாமி போட்டி

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ளார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடையவுள்ளதால், இப்போதே அதிபர் தேர்தல் ஜூரம் அமெரிக்காவில் பரவத் தொடங்கிவிட்டது.

2024 அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் மீண்டும் ஜோ பைடனே போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே போல, குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மறுபடியும் களம் காண்பார் என்றே சில தினங்களுக்கு முன்பு வரை கூறப்பட்டு வந்தது. குடியரசுக் கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து வேட்பாளர் போட்டியில் நின்றுவிடக் கூடாது என்பதில் டிரம்ப்பும் கவனமாக இருந்தார்.

இதற்காக, குடியரசுக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரிடம் பேசி தனக்கு ஆதரவை திரட்டி வருகிறார் டிரம்ப். இந்தநிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடபோவதாக ஏற்கனவே டிரம்ப் அறிவித்த நிலையில் விவேக்கும் களமிறங்க உள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பே போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட சமயத்தில், அக்கட்சியில் இருந்தே அவருக்கு எதிராக பலரும் உருவாகி வருவது டிரம்புக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் தேர்தலில் போட்டியிட தற்போது தயாராகி வரும் விவேக் ராமசாமி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here