கோத்தா கினாபாலுவில் உள்ள ஒரு விடுதியில் குடும்பத்தினருடன் அறையில் தங்கியிருந்த 12 வயது சிறுவன், இன்று திங்கள்கிழமை (பிப் 27) காலை, குறித்த விடுதியின் 14வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தது அவனின் பெற்றோருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலை 6.44 மணியளவில் சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும், உடனே சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்களின் குழு அப்பகுதியை ஆராய்ந்ததில், விடுதியின் 14வது மாடியில் குடும்பத்தினர் தங்கியிருந்ததாகவும், ஐந்தாவது மாடி வராண்டாவில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் கூறினார்.
“சம்பவ இடத்தில் இருந்த மருத்துவக் குழு சிறுவன் இறந்துவிட்டதாக அறிவித்தது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
சிறுவனின் சடலம் மேலதிக நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், இச்சம்பவத்திற்கான காரணம் விசாரணையில் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.









