அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த `மோ மோ’ ட்வின்ஸ்; அரிய நிகழ்வு என்று வியக்கும் மருத்துவர்கள்

அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் `மோ மோ ட்வின்ஸ்’ என்னும் அரிய வகை இரட்டையர்களை பெற்றெடுத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் பிரிட்னி அல்பா என்ற பெண்மணி. இவர் ஏற்கெனவே இரட்டை குழந்தைகளுக்குத் தாய்.

அக்குழந்தைகள் பிறந்த பின், ஆறு மாதங்கள் கழித்து பிரிட்னி மீண்டும் கருவுற்றார். இம்முறையும் அவர் வயிற்றில் இரட்டை குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அவர் வயிற்றில் இருந்தது `மோ மோ ட்வின்ஸ்’ என்று அழைக்கப்படும் அரிய வகை இரட்டையர்கள்.

அது என்ன மோ மோ ட்வின்ஸ்? சாதாரண இரட்டையர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? Mo Mo twins என்பதன் விரிவாக்கம் Monochorionic – Monoamniotic twins என்பதாகும். இந்த வகை இரட்டையர்களுக்கு Chorion என்று அழைக்கப்படும் கருவை சூழ்ந்து இருக்கும் தசை ஒன்றாக இருக்கும். ஒரு தசையே இரண்டு கருக்களையும் சேர்த்து மூடியிருக்கும். இது தவிர Amniotic fluid என்று சொல்லப்படுகிற நீர்க்குடமும் ஒன்றாக இருக்கும்.

பொதுவாக Monozygotic twins என்று அழைக்கப்படும் இரட்டையர்கள் ஒரு முட்டை மற்றும் ஒரு விந்து சேரும் போது உருவாகும் கரு இரண்டாகப் பிரிவதால் உருவாகிறார்கள். கரு பிரியத் தொடங்கிய பிறகு கருவை மூடி இருக்கும் தசை, நீர்க்குடம் எல்லாம் தனித்தனியாக உருவாகும்.

ஆனால் இந்த மோ மோ ட்வின்ஸில் கரு பிரிவு தாமதமாக நடைபெறும், அதற்கு முன்பே கருவை மூடும் தசையும் நீர்குடமும் உருவாகி விடுவதால் அவர்கள் அதையே பகிர்ந்து கொள்ளும் சூழல் உருவாகும். சாதாரண இரட்டையர்களை விட இவ்வகை இரட்டையர்களை பிரசவிப்பதில் சிக்கல் மிகவும் அதிகம் என்றே கூறப்படுகிறது.

பிரிட்னி வயிற்றில் இருப்பது மோமோ ட்வின்ஸ் என்று கண்டுபிடிக்கப்பட்ட பின், அவர் 25 வாரங்கள் கருவுற்றிருக்கும் சமயத்தில் UAB மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிட்டத்தட்ட 50 நாள்களை மருத்துவமனையிலேயே கழிக்க வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.

அதன் பின்னர்‌ பிரசவத்தின் சிக்கலான சூழல் கருதி 32 வாரங்கள் இருக்கும்போது குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டன. இது குறித்து கூறிய மருத்துவமனை, “பிரிட்னிக்கு தேவையான, பிரசவத்துக்கு முந்தைய சிகிச்சைகள் மற்றும் பிறகான சிகிச்சைகள் அனைத்தும் மிகுந்த கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட்டன.

இரட்டை குழந்தைகளின் நலனும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கொண்டே இருந்தது. இது மிகவும் அரியவகை நிகழ்வு என்பதால் தீவிர கண்காணிப்புடன் பார்த்துக்கொள்ளப்பட்டார்” எனத் தெரிவித்தது. இந்த இரு ஆண் குழந்தைகளும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்து, இரண்டு மாதங்கள் மருத்துவமனையிலேயே உரிய கண்காணிப்பில் இருந்தன.

இந்த அரியவகை குழந்தைகள் மற்றும் பிரிட்னியை பற்றி தற்போது UAB மருத்துவமனை கொடுத்த ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. மோமோ ட்வின்ஸ் பற்றி பேசிய UAB மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் ரேச்சல் சின்கி, `இந்த மோமோ ட்வின்ஸ் ஒரு அரிய நிகழ்வாக இருந்தாலும் இதில் இருக்கும் பிரசவ கால சிக்கல்கள் மிகமிக அதிகம். தொப்புள் கொடியை தவிர மற்ற அனைத்தையுமே இந்த இரட்டையர்கள் பகிர்ந்து கொள்வர். அது பிரசவ சமயத்தில் கொடி சுற்றி கொள்வதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்.

மேலும் குழந்தை இறந்து பிறப்பதற்கான வாய்ப்பு இந்த மோமோ வகை இரட்டையர்களில் மிக அதிகம். ஆனால் பிரிட்னியும் அவர் குழந்தைகளும் தொடக்கம் முதல் இறுதி வரை தைரியமாக இருந்து வெற்றி பெற்றுள்ளனர் எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here