ஜோகூரில் உள்ள 10 மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மலேசியாவின் மின்வழங்கள் நிறுவனமான TNB தனது 48 துணை மின் நிலையங்களை தற்காலிகமாக மூடியுள்ளது என்று, ஜோகூர் மாநில TNB பொது மேலாளர் முஹமட் நோ முஹமட் சேத் தெரிவித்துள்ளார்.
இந்த மூடுதல் காரணமாக சிகாமாட், குளுவாங், பத்து பகாட், கோத்தா திங்கி, மெர்சிங் மற்றும் மூவார் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள சுமார் 4,800 நுகர்வோர் வளாகங்களுக்கு மின் தடையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
ஜோகூர் மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துணை மின்நிலையங்களின் எண்ணிக்கை 130 ஆகும், இருப்பினும், அவற்றில் 82 துணை மின்நிலையங்களில் வெள்ள நீர் வடிந்தவுடன், அவை மின் விநியோகத்தை மீண்டும் தொடங்கியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
வெள்ள நிலைமை மோசமடைந்தால், நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த தற்காலிக மூடல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முஹமட் நோ கூறினார்.
மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோர் பிரதான சுவிட்சை ஆன் செய்வதற்கு முன், மின் வயரிங் சரிபார்க்க உரிமம் பெற்ற மின் ஒப்பந்ததாரரை அணுகுதல் வரவேற்கத்தக்கது ” என்று அவர் மேலும் கூறினார்.








