DAP பரப்பும் அரசியல் கண்ணோட்டம் உண்மைக்கு புறம்பானது; ஜோகூரில் ‘நீல அலை’ தேசிய முன்னணிக்கு ஆதரவாக வீசுகிறது – ஜோகூர் அம்னோ தகவல் பிரிவு தலைவர் முகமது இஸ்ராக்

(கோகி கருணாநிதி)

ஜோகூர் பாரு:

ஜோகூர் மாநிலத்தில் தேசிய முன்னணி பலவீனமடைந்து 40-க்கும் குறைவான தொகுதிகளையே வெல்லும் என டி.ஏ.பி. தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்து அரசியல் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட கண்ணோட்டமே தவிர, தரைமட்ட உண்மைகளை பிரதிபலிப்பதில்லை என ஜோகூர் அம்னோ மாநில தகவல் பிரிவு தலைவர் துவான் ஹாஜி முகமது இஸ்ராக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தேசிய முன்னணி தலைவர்கள் தற்போது மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்து, ஜோகூரின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களை விளக்கி வருகின்றனர். ஆனால், அதற்கு மாறாக டி.ஏ.பி. அரசியல் கண்ணோட்டங்களை உருவாக்கி மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் முயற்சியிலேயே ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம்சாட்டினார் எனபதை நேற்று ஒரு ஊடக அறிக்கையில் எதனை தெரிவித்தார்.

தேசிய முன்னணி பலம் இழந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எந்தவித உண்மைத் தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டதல்ல என்றும், அது அரசியல் பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்ட கருத்து மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது ஜோகூர் முழுவதும் தேசிய முன்னணிக்கு ஆதரவான ‘நீல அலை’ உருவாகி வருவதாகவும், நிலையான, அனுபவமிக்க மற்றும் சாதனைப் பதிவைக் கொண்ட அரசாங்கமே மாநிலத்தை தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்ற எண்ணமே மக்களிடையே வலுப்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடமிருந்து கிடைத்து வரும் வரவேற்பு, தற்போதைய தலைமையையே மக்கள் தொடர விரும்புகின்றனர் என்பதை தெளிவாகக் காட்டுவதாகக் கூறிய அவர், மக்கள் அரசியல் பிரசாரங்களை விட ஆட்சியின் செயல்திறனையும் சாதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுப்பார்கள் என்ற நம்பிக்கை தேசிய முன்னணிக்கு இருப்பதாக தெரிவித்தார்.

டி.ஏ.பி. சமூக ஊடகங்கள் வழியாக பல்வேறு அரசியல் கணிப்புகளையும் கருத்துகளையும் தொடர்ந்து வெளியிடலாம். ஆனால், வெறும் அரசியல் கண்ணோட்டங்களை உருவாக்குபவர்களுக்கும், உண்மையாக மக்களுக்காக உழைப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஜோகூர் மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

வரவிருக்கும் வாக்குப்பதிவு நாளில், ஜோகூர் மக்கள் தங்களின் தீர்ப்பின் மூலம் தேசிய முன்னணிக்கு ஆதரவாக ‘நீல அலை’யை வெளிப்படுத்துவார்கள் என்றும், அதன் மூலம் நிலையான, திறமையான மற்றும் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசாங்கம் ஜோகூரில் தொடர்ந்து அமையும் என்றும் துவான் ஹாஜி முகமது இஸ்ராக் அப்துல்லா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here