ஜோகூர் மாநிலத்தில் இன்று சனிக்கிழமை (மார்ச் 11) நண்பகல் நிலவரப்படி 44,779 பேராக இருந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, மாலை 4 மணி நிலவரப்படி 12,465 குடும்பங்களைச் சேர்ந்த 43,793 பேராக குறைந்துள்ளது.
தற்போது பத்து பகாட், மூவார், தாங்காக் மற்றும் சிகாமாட் ஆகிய நான்கு மாவட்டங்களில் மொத்தம் 162 தற்காலிக நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படடவர்கள் அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
“மிக அதிகமாக பத்து பகாட்டில் 39,919 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர், அதைத் தொடர்ந்து மூவாரில் 1,879 பேரும், தாங்காக்கில் 1,589 பேரும் , மற்றும் சிகாமாட்டில் 406 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று, இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.
இதுதவிர, மாநிலத்தின் மூவாரில் உள்ள சுங்கை மூவார், சுங்கை பெக்கோக், சுங்கை சிம்பாங் கிரி மற்றும் பத்து பகாட்டில் உள்ள சுங்கை செங்காராங் ஆகிய நான்கு ஆறுகளின் நீர் மட்டம் ஆபத்தான நிலையில் உள்ளன எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.









