சர்ச்சைக்குரிய மருத்துவர் மீது மலேசியா மருத்துவர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பிரெஸ்மா வலியுறுத்து

சர்ச்சைக்குரிய மருத்துவர் மீது எம்எம்ஏ எனப்படும் மலேசியா மருத்துவர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரெஸ்மாவின் தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி வலியுறுத்தினார். நாட்டில் உள்ள மாமாக் உணவகங்களில் உணவுகள் தரம் இல்லை என்று மருத்துவர் ஒருவர் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட மருத்துவரின் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில் நாட்டில் உள்ள மாமாக் எனப்படும் இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மலேசியர்கள் அனைவரும் சமம். அவர்களிடையே எந்த பிரிவினைகளும் இருக்கக் கூடாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மதானி மலேசியா எனும் கொள்கையை அறிமுகம் செய்தார். ஆனால் இந்த மருத்துவரின் செயல் அந்த கொள்கைக்கு எதிரானதாக உள்ளது.

இதன் அடிப்படையில் தான் நாடு தழுவிய நிலையில் உள்ள உணவு உரிமையாளர்கள் போலீஸ் புகார் செய்து வருகின்றன. அந்த மருத்துவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆரோக்கியமான உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது நல்ல விஷயம் தான்.

அதற்காக இந்திய முஸ்லிம் உணவகங்கள் எதுவும் ஆரோக்கியம் அல்ல என்று அந்த டாக்டர் கூறியதுதான் மிகப்பெரிய தவறு. நாட்டில் உள்ள உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை தான் வழங்கி வருகின்றன. அதே உணவை தான் உரிமையாளர்களும் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களும் சாப்பிடுகின்றனர்.

அப்படியே ஒரு சூழ்நிலையில் ஆரோக்கியம் இல்லாத உணவை நாங்கள் எப்படி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவோம்.

அந்த டாக்டர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா?. அது அவர் நிருபிக்க முடியுமா என்பதுதான் எங்களின் கேள்வியாகும். குற்ற நடவடிக்கைகளில் சிக்கும் மருத்துவர்கள் மீது மலேசியா மருத்துவர் சங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும்.

அப்படி ஒரு சூழ்நிலையில் இந்த மருத்துவரின் செயலும் ஒரு குற்றம் தான். ஆகவே சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது மலேசியா மருத்துவர் சங்கம் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மலேசியா மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் முருகராஜ் ராஜதுறை இந்த விவகாரத்தை விசாரித்தது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் என்று டத்தோ ஜவஹர் அலி கூறினார்.

தனிநபர் உட்பட இதர விவகாரம் தொடர்பில் அவதூறு கூறும் பட்சத்தில் அது மலேசிய சட்ட அமைப்பில் செக்‌ஷன் 499 சட்டவிதியின் கீழ் குற்றமாகும்.

உலகளாவிய சுகாதார பாதுகாப்புக்கான தேசிய கூட்டு அர்ப்பணிப்பை மலேசிய மருத்துவர் சங்கம் வலியுறுத்துகிறது என்று அதன் முன்னாள் தலைவர் டாக்டர் முகமட் நமாஸி இப்ராஹிம் கடந்த 2019ஆம் ஆண்டு வலியுறுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here