கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் உள்ள ஜின்ஜாங் (Jinjang) மற்றும் பத்து (Batu) ஆகிய முக்கிய வெள்ளத் தடுப்புக் குளங்களின் நிலங்கள் மேம்பாட்டாளர்களுக்குக் கைமாறியதால், அவற்றின் கொள்ளளவு 30 சதவீதமாகக் குறைந்துள்ளது. இவ்விவகாரத்தில் வெறும் மேம்பாட்டாளர்களை மட்டும் குற்றஞ்சாட்டாமல், இத்திட்டங்களுக்குப் பச்சைக்கொடி காட்டிய அதிகாரிகளும் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று பொருளாதார மற்றும் நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலப் பரிமாற்றங்கள் காரணமாக, 33.5 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இக்குளங்களின் 70 சதவீத நிலங்கள் பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தலைநகரின் வெள்ளத் தடுப்பு அரண் பலவீனமடைந்துள்ளதாகப் பிரதமர் துறை (கூட்டரசு பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா இயோ அண்மையில் நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்திருந்தார்.
இது குறித்துப் பேசிய மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (UTM) இணைப் பேராசிரியர் டாக்டர் முகமட் நஜீப் ரசாலி:
மேம்பாட்டாளர்கள் முறையான சட்ட வழிகளில் கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) மற்றும் நீர்ப்பாசன, வடிகால் துறையிடம் (DID) அனுமதி பெற்றே இத்திட்டங்களைத் தொடங்கியுள்ளனர். எனவே, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் இந்த நில மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்த அதிகாரிகளுக்கே இதில் அதிகப் பொறுப்பு உள்ளது,” என்று சுட்டிக்காட்டினார்.
எனினும், சுற்றுச்சூழல் மற்றும் வெள்ள அபாயக் கட்டுப்பாட்டு விதிகளை மேம்பாட்டாளர்கள் மீறியிருந்தால், அவர்கள் மீதும் பாரபட்சமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரத்தில், புதிய திட்டங்களுக்கு அரசாங்கம் தற்போது இடைக்காலத் தடை விதித்திருப்பதை ஜுவாய் ஐக்யூஐ (Juwai IQI) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி காஷிஃப் அன்சாரி வரவேற்றுள்ளார். இது போன்ற பொது உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பது, எதிர்கால வெள்ளப் பாதிப்புகளிலிருந்து கோலாலம்பூரைக் காக்க மிக மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஏற்கனவே நிறைவடைந்த திட்டப் பகுதிகளில் கூடுதல் வடிகால் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள திட்டங்களின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து உடனடியாக முறையான தணிக்கை (Audit) நடத்தப்பட வேண்டும் என்றும் வல்லுநர்கள் தங்களின் கூட்டு அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















