கூச்சிங்கில் இன்று காலை ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, 41 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 160 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி, தற்காலிக நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் என்று, சரவாக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுச் செயலகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதில் 25 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 112 பேர் டேவான் சின்னார் புடி பாருவில் உள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும் 16 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் பத்து காவாவில் உள்ள டேவான் ஸ்தாபோக்கில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
“நேற்றிரவு முதல் இன்று காலை வரை பெய்த கனமழை காரணமாக கூச்சிங்கின் பெரும்பாலான பகுதிகளில் காலை 7 மணி முதல் வெள்ளம் வரத் தொடங்கியது.
இந்நிலையில், சரவாக் பொது மருத்துவமனையும் (HUS), அதன் அவசர சிகிச்சைப் பிரிவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வார்டில் உள்ள மஞ்சள் மற்றும் சிவப்பு மண்டலங்களில் சிகிச்சை பெற்ற நோயாளிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.