ஆஸ்திரேலியா ஆற்றில் மில்லியன்கணக்கில் செத்து மிதந்த மீன்கள்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம், மெனிண்டீ நகரை ஒட்டிப் பாயும் ஆற்றில் மில்லியன்கணக்கான மீன்கள் செத்து மிதந்தது அந்நகரவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டார்லிங்-பாக்கா ஆற்றில் இப்படி ஏராளமான மீன்கள் செத்து மிதந்தது முதன்முதலில் நேற்று வெள்ளிக்கிழமை (17-03-2023) கண்டறியப்பட்டது.  இப்போது வீசும் வெப்ப அலைதான் இதற்குக் காரணம் என்று மாநிலத்தின் நதி ஆணையம் தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குமுன் அவ்வாற்றில் இதேபோல் மீன்கள் மடிந்து மிதந்தன. ஆனாலும், இப்போதைய நிகழ்வுதான் ஆக மோசமானது என்று மெனிண்டீ நகரவாசிகள் கூறினர்.

செத்து மிதக்கும் மீன்கள் நீரிலிருந்து அதிக உயிர்வாயுவை எடுத்துக்கொள்ளும் என்பதால் மீன்கள் மடிவது தொடரலாம் என்று அந்நகரைச் சேர்ந்த கிரேமி மெக்ரேப் என்பவர் கூறினார்.

இதனால் அங்கு கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மெனிண்டீ நகரவாசிகளின் முக்கிய நீராதாரமாக அந்த ஆறு திகழ்கிறது. இதனால் அங்கு நீர் விநியோகமும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை அங்கு வெப்பநிலை 41 டிகிரி செல்சியசை எட்டும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here