கோலாலம்பூர்:
எல்லை கடந்த புகைமூட்டத்தால் சரவாக் மாநிலத்தின் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதைத் தொடர்ந்து, அங்குள்ள 591 பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன.
மலேசிய காற்று மாசு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் தரவுகளின்படி, மலேசிய-இந்தோனேசிய எல்லைக்கு அருகிலுள்ள செரியான் பகுதியில் காற்றின் தரக் குறியீடு (API) 242-ஆக உயர்ந்துள்ளது, இது மிகவும் ஆரோக்கியமற்ற நிலையைக் குறிக்கிறது.
மேலும், ஸ்ரீ அமான், கூச்சிங், சமராஹான், சாரிகே, சிபு, பிந்துலு, கபிட் ஆகிய பகுதிகளிலும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளது.
இந்த மோசமான சூழலால், 10 மாவட்டக் கல்வி அலுவலகங்களின் கீழ் வரும் 509 தொடக்கப் பள்ளிகளும், 82 இடைநிலைப் பள்ளிகளுமாக மொத்தம் 591 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்த முடிவினால் சுமார் 197,323 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காற்றின் தரம் 201 முதல் 300 வரை இருந்தால் அது ஆரோக்கியமற்ற நிலையாகக் கருதப்படுவதால்,மாணவர்கள், பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாக்க, புகைமூட்டம் குறையும் வரை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பை மேற்கொள்கின்றனர்.
இதன் காரணமாக, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
























