அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பு மீதான முடக்கத்தை நீக்குங்கள்; இந்தியர்களின் பாரம்பரிய வணிகங்களை முடிவுக்கு கொண்டுவராதீர்கள்

நாட்டில் தற்காலிகமாக வெளிநாட்டுத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியர்களின் பாரம்பரிய வணிகங்களான முடி திருத்துதல், பொற்கொல்லர் மற்றும் ஜவுளி ஆகிய மூன்று துணைத் துறைகளும் அழியும் தருவாயில் உள்ளதாக, முன்னாள் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் அரசாங்கத்திடம் தெரிவித்தார்.

“ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றிக்கு இந்திய சமூகத்தின் மிகப்பெரிய ஆதரவை மறந்துவிடாதீர்கள், அதற்கு பதிலாக, இப்போது இந்திய வணிகங்களை அழிந்துபோகுமளவுக்கு நெருக்குதல்களை கொடுக்கிறீர்கள்” என்று, இன்று புதன்கிழமை (மார்ச் 22) நாடாளுமன்றத்தில் நடந்த பட்ஜெட் 2023 குழுநிலையான விவாதத்தின் போது அவர் கூறினார்.

உள்ளூர் இந்திய வணிகச் சமூகம் அதிக அளவில் ஈடுபட்டுள்ள மூன்று துணைத் துறைகளில் (முடி திருத்துதல், பொற்கொல்லர் மற்றும் ஜவுளி) வெளிநாட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதை, அரசு தற்காலிகமாக மார்ச் 15 முதல் முடக்கியது தொடர்பாக குலசேகரன் (PH-Ipoh Barat) இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

குடிநுழைவுத் திணைக்களத்தின் சுற்றறிக்கையின்படி, தற்காலிக பணி அனுமதிச் சீட்டுகளை நீட்டிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 ஆகும், இருப்பினும் குறித்த பணி அனுமதி பாஸ்கள் அவற்றின் அதிகபட்ச செல்லுபடியாகும் காலமான 13 வருடங்களை கொண்டிருக்கவில்லை. மற்றும் மார்ச் 15-க்கு முன் பணி அனுமதி முடிந்த தொழிலாளர்கள் ஒரு வருடத்திற்கு மட்டுமே புதுப்பிக்க முடியும், அதன் பிறகு அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை தான் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 20) சந்தித்தபோது, அவருக்கு இந்த விஷயம் தொடர்பில் தான் சுட்டிக்காட்டியதாகவும், அவர் பிறகு மனிதவள அமைச்சர் வி. சிவகுமாருக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் குலசேகரன் கூறினார்.

இதுதவிர வெளிநாட்டு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது முடக்கப்பட்டுள்ளதுடன், தற்போது பணியில் உள்ளவர்களும் விரைவில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற சூழ்நிலையுள்ளதாக குலசேகரன் மேலும் கூறினார்.

“இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பதற்கான புத்திசாலித்தனமான மற்றும் விரைவான முடிவை எடுக்க மனிதவள அமைச்சர் விரைவில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திப்பார் என்று நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here