ஜாலான் லங்காவி, ஸ்தாப்பாக் என்ற இடத்தில் உள்ள சொகுசுமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து, ஏழு வயது சோமாலிய சிறுவன் உயிரிழந்தான்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை (ஏப்ரல் 4) இரவு 7.49 மணியளவில் நிகழ்ந்ததாக வங்சா மாஜூ மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் டி.சாரலதன் தெரிவித்தார்.
“சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பிளாக் B கட்டிடத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு அருகிலுள்ள சாலையில் பாதிக்கப்பட்டவரின் சடலம் கண்டெடுத்தனர். பாதிக்கப்பட்டவரின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது இரண்டு கைகளும் முறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் “பாதிக்கப்பட்டவரின் காதுகளிலிருந்தும் ரத்தம் கொட்டியது. அவர் நீண்ட பேன்ட் மற்றும் நீண்ட கை சட்டை மற்றும் ஷூ அணிந்திருந்தார், என்றும் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது ” என்றும் அவர் கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்டவர் B பிளாக் கட்டிடத்தில் உள்ள காண்டோமினியம் பிரிவில் தங்கியிருந்தார் என்றும் , A பிளாக்கில் படித்து வருவதும் தெரியவந்தது.
“படிப்பு முடிந்து, பாதிக்கப்பட்டவர் ஐந்தாவது மாடியில் இருக்கும் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே உள்ள பாலத்தைப் பயன்படுத்தி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அப்பாலத்தினை பயன்படுத்த அனுமதி அட்டை இல்லாததால், அவர் கதவைத் திறக்க முடியாமல் ஜன்னல் வழியாக ஏறியதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
ஏழு வயது சிறுவன் சோமாலிய அகதி என்றும் அவரது பெற்றோர் 2017 முதல் மலேசியாவில் வசித்து வருவதாகவும் அறியமுடிகிறது என்றார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வங்சா மாஜூ காவல்துறையை 03-9289 9222 என்ற எண்ணில் அல்லது KL போலீஸ் ஹாட்லைன் 03-2115 9999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.








