ஜாலான் மெர்பாவ், பண்டார் புத்ரா ரமலான் பசாரில் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் மற்றும் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) இரவு 10.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூலாய் மாவட்ட காவல்துறை தலைவர் தோக் பெங் இயோவ் கூறினார்.
“சந்தேக நபர் தனது நண்பர்கள் மூவருடன் வந்து, ரமலான் பசாரில் பட்டாசு விற்பனை செய்வது தொடர்பாக பாதிக்கப்பட்டவரை அணுகினார், அப்போது சந்தேக நபர்களில் ஒருவர் பாதிக்கப்பட்ட 41 வயதான நபரின் மார்பில் எட்டி உதைத்ததாகவும், அதனால் பாதிக்கப்பட்ட நபர் கீழே விழுந்ததாகவும், பின்னர் அவரை குறித்த கும்பலால் அவர் மரக் கம்பியால் தாக்கப்பட்டதாகவும், இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர் குறித்த நான்கு சந்தேக நபர்களாலும் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் “அவருக்கு தலை மற்றும் இரு கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன,” என்று தோக் கூறினார்.
மேலும் சந்தேக நபர்களால் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மூலம் பாதிக்கப்பட்டவர் RM5,000 க்கு மேல் இழந்ததாகக் கூறினார், சம்பவத்திற்குப் பின்னர் கூலாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அந்த நபர், நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 5) மதியம் 12.30 மணியளவில் கூலாய் போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்தார்.
அதன்பின்னர், நேற்று மதியம் 1.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை மேற்கொண்ட தேடுதல் மூலம்
18 மற்றும் 47 வயதுடைய நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து நாங்கள் ஒரு மரக் குச்சியையும் கைப்பற்றினோம், ”என்று அவர் மேலும் கூறினார்.
இவ்வழக்கின் விசாரணைக்கு உதவ மற்றொரு நபரை போலீசார் தேடி வருவதாகவும், கைது செய்யப்பட்ட நால்வரும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 9) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கொள்ளைச் சம்பவத்தில் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்தியதற்காக குற்றவியல் சட்டம் பிரிவு 394-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தோக் கூறினார்.







