ஜோகூரிலுள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில் காட்டப்பட்ட உள்ளூர் ஆணும் அவரது தோழியும் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 7) முதல் இரு நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவை, ஜோகூர் பாரு மாவட்ட நீதிமன்ற நீதிபதி நூர்ஃபாஸ்லின் ஹம்டான் பிறப்பித்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 377D இன் படி, குறித்த ஜோடியை விளக்கமறியலில் வைத்து மேலும் விசாரணை நடத்துவதற்கு காவல்துறையினர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை நீதிபதி அனுமதித்தார்.
கார் நிறுத்துமிடத்தில் அநாகரீகமான செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் குறித்த இருவரையும், போலீசார் நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 6) கைது செய்தனர்.
அவர்களின் அநாகரீகமான செயல் 23 வினாடி வீடியோவாக டுவிட்டரில் பதிவேற்றப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, குறித்த ஜோடி கைது செய்யப்பட்டதாக ஸ்ரீ ஆலாம் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், முகமட் சுஹைமி இஷாக் கூறினார்.
“இந்தச் சம்பவம் புதன்கிழமை (மார்ச் 29) மதியம் 3.03 மணியளவில் பாசீர் கூடாங்கில் உள்ள தாமான் கோத்தா மாசாய் என்ற இடத்தில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் நடந்தது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் இரண்டு வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் முறையே 22 வயதுடைய ஆண் ஒருவரையும், 17 வயது பெண் ஒருவரையும் தடுத்து வைத்துள்ளோம்” என்று முகமட் சுஹைமி கூறினார்.
முதற்கட்ட விசாரணையில் சந்தேகநபர்கள் இருவருக்கும் முந்தைய குற்றப் பதிவுகள் இல்லை என்று கூறிய அவர், குற்றம் புரிந்த சான்றுப்பொருளான கார் மற்றும் சிவப்பு-வெள்ளை சட்டையை போலீசார் கைப்பற்றியதாகவும் கூறினார்.








