சிக் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக 40 பேர் மீது குற்றச்சாட்டு

கடந்த ஜனவரி மாதம் சிக்கில் உள்ள புக்கிட் எங்காங் வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக 35 வெளிநாட்டவர்கள், 5 உள்ளூர்க்காரர்கள் என மொத்தம் 40 பேர் மீது அமர்வு நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

அதில் 21 மற்றும் 54 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்களுக்கு எதிரான குற்றச்சாட்டு தனித்தனியாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் தாம் குற்றமற்றவர்கள் என கூறி விசாரணை கோரினர்.

மேலும் 57 முதல் 60 வயதுடைய மற்ற இரு உள்ளூர் ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணிற்கு எதிராக மலாய் மொழியில் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அவர்களுக்கு புரியவில்லை என்று கூறியதால், எந்த ஒரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

18 முதல் 50 வயதுக்குட்பட்ட 31 மியான்மர் நாட்டவர்கள், இரண்டு சீனர்கள் மற்றும் நேபாளிகளும் தம்மால் மலாய் மொழியைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறியதால், அவர்களிடம் எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை.

31 ஜனவரி இரவு 9 மணி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி அதிகாலை 3 மணி வரை, நுழைவு அனுமதி இல்லாமல், குறிப்பாக கம்பார்ட்மென்ட் 12, புக்கிட் எங்காங் வனப் பகுதிக்குள் நுழைந்ததாக, அவர்கள் அனைவருக்கும் எதிராக தேசிய வனச்சட்டம் 1984 இன் உட்பிரிவு 47(1)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இவ்வழக்கில் ஐந்து மலேசியர்களுக்கும் தலா ரிங்கிட் 5,000 ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதித்தது.

இரண்டு சீனப் பிரஜைகளும் தலா 7,000 ரிங்கிட் ஜாமீன் மற்றும் இரண்டு மலேசியக் குடிமகன்களின் ஆட் பிணையும் வழங்கப்பட்டது, மேலும் அவர்களது பாஸ்போர்ட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

31 மியான்மர் பிரஜைகள் மற்றும் இரண்டு நேபாளர்கள் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாததற்காக குடிவரவு சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை.

வழக்கை மீண்டும் செவிமடுக்க ஜூன் 11ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here