சுங்கை ஊடாங் குப்பைக் கிடங்கில் இருந்து கழிவுகளை முறையற்ற வகையில் வெளியேற்றுவதன் காரணத்தினால் மலாக்காவின் லேரே ஆறு மீண்டும் மாசடைந்துவிட்டது என்று, கிளேபாங் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
சுங்கை ஊடாங்கில் உள்ள நீர் சுத்திகரிப்பு குளங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மாசுபடுவதால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக டத்தோ லிம் பான் ஹாங் கூறினார்.
இந்த மாசுபாடு தண்ணீருடன் கலப்பதால், அது மீனவர்களுக்கு அரிப்புகள் போன்ற தோல் நோய்களையும் ஏற்படுத்தியதாக நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 20) அந்த இடத்தைப் பார்வையிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் கூறினார்.

“குறித்த ஆற்று நீர் மாசடைவதில் சட்ட மீறல்கள் ஏதேனும் உள்ளதா என்பதை அறிய நீர் மாதிரி பகுப்பாய்வு செய்யுமாறு மலாக்கா சுற்றுச்சூழல் துறையிடம் கேட்டுள்ளேன்,” என்று, அவர் மேலும் கூறினார்.
இவ்வாறு லேரே ஆறு மாசுபட்டுள்ளதால், மீன்பிடி சமூகங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் அழிவுகரமான விளைவுகளுக்கு வழிவகுக்கும், அத்தோடு இதனால் மீன்பிடித்தல் குறைந்து வருவதால், மீனவர்களும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர் என்றார்.








