சிங்கப்பூர், மலேசியாவின் கூட்டரசு அரசாங்கத்துக்கு அப்பால் மாநில அரசாங்கங்களுடனும் தொடர்புகளை மேம்படுத்த விரும்புவதாக சிங்கப்பூர் வெளியுறவு இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
அதாவது எல்லை தாண்டிய ஒத்துழைப்பு, சுற்றுலா , கல்வி போன்ற அம்சங்கள் அவற்றில் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரெங்கானு, கிளாந்தான் ஆகியவற்றுக்கு, இம்மாதம் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அவர் மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணத்தின்போது, அதுகுறித்து தாம் கலந்துரையாடியதாக மாலிக்கி ஒஸ்மான் கூறினார்.
மேலும் அவரது பயணத்தில், நகரத் திட்டமிடல், வேளாண்மை போன்றவை குறித்தும் கலந்துரையாடப்பட்டது என்றார்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையில் நிலவும் வலுவான உறவுகள் தொடரும் என்று கூறிய அவர், அது கோலாலம்பூருடன் மட்டுமன்றி மாநில அரசுகளுடனும் தொடரும் என்றார்.
திரெங்கானு, கிளாந்தான் இரு மாநிலங்களுக்கும் சிங்கப்பூரில் சுற்றுப்பயண அலுவலகம் அமைக்க தாம் அழைப்பு விடுத்துள்ளதாக டாக்டர் மாலிக்கி கூறினார். சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு மாநிலத் தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக அவர் சொன்னார்.
உள்கட்டமைப்பு மேம்பாடு, நீர் ஒதுக்கீடு போன்றவை தொடர்பில் சிங்கப்பூர் அதன் தொழில்நுட்ப அறிவை இரு மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளும் எனக் கூறப்பட்டது.
கல்விக்கான இரண்டாம் அமைச்சருமான டாக்டர் மாலிக்கி, இரு நாட்டுக் கல்வித்துறைகளும் இளையர்கள் அணுக்கமாகப் பணியாற்ற வாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.