கோத்தா திங்கியில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் மூவர் கைது

கோத்தா திங்கிக்கு அருகிலுள்ள ஃபெல்டா அடேலாவில் இன்று அதிகாலை போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது, துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட 33, 35 மற்றும் 39 வயதுடைய மூன்று சந்தேக நபர்களும், அதிகாலை 1 மணியளவில் ஃபெல்டா அடிலாவில் உள்ள ஜாமேக் அல்-இக்வான் மசூதிக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டனர். அதில் ஒருவர் காவல்துறையின் தேடப்படும் சந்தேக நபர்கள் பட்டியலில் உள்ளவர் என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் கூறினார்.

இந்தச் சோதனையின் போது, வீட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கி தோட்டாக்கள், பெரெட்டா கார்டோன் VT பிஸ்டல், நான்கு 9 மிமீ தோட்டாக்கள் கொண்ட தோட்டா உறை, ஒரு கத்தி, கஞ்சா மற்றும் எராமின் 5 மாத்திரைகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து, ஃபெல்டா துங்கலில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதாகவும், அங்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஏர் பிஸ்டல்கள், மூன்று தோட்டா உறைகள், ஒரு தோட்டா மற்றும் 10 மார்பிள்கள் ஆகியவற்றைக் கைப்பற்றியதாகவும் கமாருல் கூறினார்.

“கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறுவிதமாக பயன்படுத்தப்பட்டதா என்பதை தீர்மானிக்க அதாவது, கடந்த காலங்களில் வீடு உடைப்பு சம்பவங்களில் அல்லது கொள்ளை சம்பவங்களில் இந்த துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்துவார்கள்” என்றார்.

கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here