MACC அறிக்கை மீது போக்குவரத்து அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்கும் – லோக்

போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊழியர் சம்பந்தப்பட்ட தவறான நடத்தை குறித்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACCச) அறிக்கை தொடர்பாக போக்குவரத்து அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (மே 16) மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ ஆசாம் பாக்கியை சந்தித்து தனது அமைச்சகத்தில் தீர்க்கப்படாத ஒழுங்குவிதி மீறல் வழக்குகள் குறித்து விவாதித்ததாக போக்குவரத்து அமைச்சரான அவர் கூறினார்.

இச்சந்திப்பின் விளைவாக, ஒவ்வொரு ஒழுக்காற்று நடவடிக்கை வழக்கும் உடனடியாகச் செயல்படுவதை உறுதிசெய்து MACC க்கு அறிக்கை அளிக்குமாறு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோ ஜனா சந்திரன் முனியனுக்கு அறிவுறுத்தியதாக லோக் கூறினார்.

நிலுவையில் உள்ள ஒழுக்காற்று வழக்குகளின் எண்ணிக்கை குறித்து கேட்டபோது, இது உள்விவகாரம் என்றும், அதேநேரத்தில் தீர்க்கப்பட்ட ஆனால் எம்ஏசிசிக்கு புகாரளிக்கப்படாத வழக்குகளும் இருப்பதாகவும் லோக் கூறினார்.

“முக்கியமான விஷயம் என்னவென்றால், எம்ஏசிசி பரிந்துரைத்தவற்றின் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்பதுதான். இவ்விஷயத்தில் எம்ஏசிசி தலைமை ஆணையருக்கு அமைச்சகம் முழுமையாக ஒத்துழைக்கும் என்பது எனது உறுதிப்பாடு.

மேலும் இதுவரை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படாத வழக்குகள் உடனடியாகத் தொடரப்படும் என்று
இன்று வெள்ளிக்கிழமை (மே 19) போக்குவரத்து நெரிசல் தொடர்பான தொழில்நுட்பக் குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர், செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here