ஆற்றில் குளித்தபோது காணாமல் போன சிறுவனைக் கண்டுபிடிக்க, மோப்ப நாய்களை ஈடுபடுத்துகிறது தீயணைப்புத் துறை

நேற்று தஞ்சோங் மாலிமில் உள்ள Teratak River View Lubuk Hantu ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி காணாமல் போன எட்டு வயது சிறுவனை கண்டுபிடிக்க பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, கே9 பிரிவில் இருந்து மோப்ப நாய்களை பயன்படுத்துகிறது.

ஆற்றங்கரையில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கையில் இரண்டு நாய்களும் பங்கேற்றன என்று, பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவு துணை இயக்குநர், சபரோட்ஸி நோர் அஹ்மட் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் கடைசியாகக் காணப்பட்ட இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மேற்பரப்பு தேடலுடன் மீட்புக் குழு இன்று காலை மீண்டும் நடவடிக்கைகளை தொடங்கியது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இரண்டாம் நாளான இன்று மீட்புப் பணிகளில் தஞ்சோங் மாலிம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 24 தீயணைப்பு வீரர்களும், ஈப்போ, கோலக் கங்சார் மற்றும் தெலுக் இந்தானிலிருந்து நீர் மீட்புக் குழு பணியாளர்களும் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

இந்த நடவடிக்கைக்கு காவல்துறை, மக்கள் தன்னார்வப் படை (RELA) மற்றும் மலேசிய குடிமைத் தற்காப்புப் படை (APM) மற்றும் கம்போங் ஸ்லிம் தன்னார்வ தீயணைப்புப் படையின் (PBS) உறுப்பினர்களும் உதவுகின்றனர் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here