எங்கள் பிள்ளைகள் மீது கைவைக்காதீர் மதமாற்றம் செய்வோருக்கு மலேசிய இந்து சங்கம் எச்சரிக்கை

இந்துத் தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகளை மதமாற்றம் செய்து பெரும் பாவத்தில் விழ வேண்டாம் என்று மதமாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள கும்பல்களுக்கு மலேசிய இந்து சங்கம் நேற்று கடுமையான எச்சரிக்கை விடுத்தது. எங்களது சமய சுதந்திரத்தில் தலையிடுவதற்கு மாற்றுச் சமயத்தினருக்கு எந்த உரிமையும் அதிகாரமும் இல்லை. எங்கள் பிள்ளைகளை ஒழுக்க நெறியுடன் வளர்ப்பது எப்படி என்பது இந்திய சமுதாயத்திற்குத் தெரியும். எங்களுக்கு யாரும் பாடம் கற்றுத்தர வேண்டாம் என்று மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் தங்க. கணேசன் நினைவுறுத்தினார்.

ஏழ்மை நிலையில் உள்ள இந்துப் பிள்ளைகளை குறிப்பாக பிபிஆர் வீட்டுப் பகுதிகளில் வாழும் பி40 தரப்பு மக்களுக்கு ஆசை வார்த்தைகளைக் கூறி மதமாற்றும் நடவடிக்கையில் ஒரு கும்பல் ஈடுபட்டிருந்த விவகாரம் கடந்த மே 28ஆம் தேதியில் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

எங்கள் பிள்ளைகளை மதமாற்றுவதற்கு நீங்கள் யார்? உங்கள் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். நாடு முழுவதும் இந்த மதமாற்ற நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுக்கு எதிராக மலேசிய இந்து சங்கம் நாடு முழுவதும் போலீஸ் புகார்களை செய்து வருகிறது. நேற்று வரை நூற்றுக்கும் அதிகமான போலீஸ் புகார்கள் ஙெ்ய்யப்பட்டுள்ளன என்று தங்க. கணேசன் குறிப்பிட்டார்.

நாட்டில் செயல்படும் அனைத்து சமய இயக்கங்களும் இந்த மதமாற்ற நடவடிக்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் போராடவும் தயங்க மாட்டோம். அனைத்துக்கும் தயாராக இருக்கிறோம். இங்கு மட்டுமல்ல நாட்டில் எங்கு மதமாற்றம் நடந்தாலும் எங்கெல்லாம் எங்கள் குரல் ஒலிக்கும். நடவடிக்கையும் இருக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.  புக்கிட் ஜாலில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் புக்கிட் ஜாலில் தோட்டம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இந்து சமயத் தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பில் தங்க. கணேங்ன் பேசினார்.

மலேசிய இந்து சங்கத்துடன் மலேசிய இந்து தர்ம மாமன்றமும் மேலும் 40 இயக்கங்களும் ஒன்றிணைந்து போலீஸ் புகார்களைச் செய்து வருகிறோம். இந்து சமுதாயத்தைப் பாதிக்கக்கூடிய அனைத்து விவகாரங்களிலும் ஒன்றிணைந்து ஙெ்யல்படுவதற்கும் பாடுபடுவோம் என்று அவர் உறுதி அளித்தார். எங்கள் பிள்ளைகளை மதம் மாற்றுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இனியும் வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார். நாடு முழுவதும் உள்ள மலேசிய இந்து சங்க வட்டாரப் பேரவைகள் இவ்விவகாரத்தில் மிகவும் விழிப்புடன் செயல்படும். மதமாற்றத்திற்கு எதிராகப் போலீஸ் புகார்களையும் செய்யும் என்று தங்க. கணேசன் கூறினார்.

இதனிடையே பேசிய மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தேசியத் தலைவர் ராதாகிருஷ்ணன் அழகுமலை, இந்துக்களை மதமாற்றம் செய்வது இனியும் நடக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதற்கே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இதில் எங்களது நிலைப்பாடு மிக உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறது என்று சொன்னார். தேசிய அளவிலும் மாநில அளவிலும் ஒரு ஹோட்லைன் இணைப்பை ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்து வருகிறோம். இதன்வழி நாட்டில் எங்கு மதமாற்றம் ஏற்பட்டாலும் அதுபற்றிய தகவல்களை இதன்வழி திரட்டி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

செய்தி – தி.மோகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here