கூலாயிலுள்ள பண்டார் புத்ரா, ஜாலான் கெனாரியில் உள்ள ஒரு பாலர் பள்ளியின் கதவை உடைத்து கொள்ளையடித்தது தொடர்பில் 31 வயது நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 11) இரவு 7.30 மணியளவில் ஃபெல்டா புக்கிட் ராமுனில் உள்ள ஜாலான் உத்தாமாவில் உள்ள ஒரு பலசரக்கு கடைக்கு முன்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கூலாய் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் யூசப் ஓத்மான் தெரிவித்தார்.
“கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்தது, பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கதவு கைப்பிடியில் சிராய்வுகள் இருப்பதைக் கவனித்தார், பின்னர் சோதனை செய்ததில் பள்ளியின் மடிக்கணினி மற்றும் ப்ரொஜெக்டரைக் காணவில்லை,” என்று அவர் கூறினார்.
கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை சோதித்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாலர் பள்ளிக்குள் புகுந்து, ரிம2,000 மதிப்புள்ள பொருட்களை திருடுவதைக் கண்டதாக யூசோப் மேலும் கூறினார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் மற்றும் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் என்பவற்றை போலீசார் மீட்டனர்.
சந்தேக நபர் கடந்த ஆண்டு முதல் பண்டார் புத்ராவில் நடந்த பல வீடு உடைப்பு வழக்குகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் யூசோப் மேலும் கூறினார்.
சந்தேக நபருக்கு எதிராக முந்தைய 6 குற்றப் பதிவுகள் உள்ளதாகவும், போதைப்பொருள் உட்கொண்டதற்காக ஆபத்தான போதைப்பொருள் சட்டம் 1952 இன் பிரிவு 15(1)(a) இன் கீழ் தேடப்படும் நபர் என்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தற்போது ஜூன் 18 வரை ஏழு நாட்கள் விளக்கமறியலில் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.









