வெளிநாட்டவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை; மூவர் கைது

பட்டர்வொர்த்: நேற்று அதிகாலை வயிற்றில் கத்தியால் குத்தப்பட்ட ஒரு வெளிநாட்டவர், உயிரிழந்தது தொடர்பில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

அதிகாலை 3.50 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பில், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் (HSJ) மருத்துவ அதிகாரியிடமிருந்து “33 வயதுடைய ஆண் ஒருவர் ஆபத்தான காயங்களுடன் அவரது நண்பரால் அழைத்து வரப்பட்டார்” என போலீசாருக்கு ஒரு அறிக்கை கிடைத்தது.

எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த ஆடவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

பிரேதப் பரிசோதனையின் அடிப்படையில், அடிவயிற்றில் குத்தப்பட்ட காயம்தான் பலியானவரின் மரணத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது என்று, செபெராங் பிறை உத்தாரா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் அஸ்ரி ஷாஃபி கூறினார்.

“இந்த வழக்கில் தொடர்புடையதாக நம்பப்படும் பாதிக்கப்பட்டவரின் முதலாளி உட்பட 28 முதல் 40 வயதுடைய சக ஊழியர் ஆகிய மூன்று பேர், அதே நாளில் இரவு 10 மணியளவில், பட்டர்வொர்த் மற்றும் பெர்மாடாங் பாவ் ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர், தான் தப்பிச் செல்வதற்கு முன் சம்பவ இடத்தில் இருந்தபோது பாதிக்கப்பட்டவரை காயப்படுத்தியதை ஒப்புக்கொண்டார்.

“சம்பவம் நடந்தபோது குடிபோதையில் இருந்த பாதிக்கப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறே இந்த சம்பவத்திற்கு காரணம்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த முஹமட் அஸ்ரி, சம்பவத்தின் போது சந்தேகநபர் பயன்படுத்தியதாக கருதப்படும் கைத்தொலைபேசி, கத்தி, இரண்டு மதுபான போத்தல்கள், ஷார்ட்ஸ் மற்றும் டி-சர்ட் என்பன சான்றுப்பொருளாக போலீசாரால் கைப்பற்றப்பட்டதாக கூறினார்.

மூன்று சந்தேக நபர்களும் விசாரணைக்காக நேற்று முதல் சனிக்கிழமை வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here