கோலாலம்பூர்: மலேசியாவை சிறுமைப்படுத்தும் விதமாக, காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 குறித்து கேலி செய்யும் காணொளி வைரலானதை அடுத்து, சர்ச்சைக்குரிய ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகை ஜோஸ்லின் சியாவைக் கண்டுபிடிக்க அனைத்துலக போலீசாரின் உதவியை மலேசிய போலீசார் நாடவுள்ளனர்.
அதற்காக நடிகை சியாவின் முழு அடையாளம் மற்றும் அவருடைய சமீபத்திய இருப்பிடத்தைப் பெறுவதற்கு இன்டர்போல் எனப்படும் அனைத்துலக போலீசாரிடம் விண்ணப்பம் செய்யப்படும் என்று தேசிய போலீஸ்படை தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கேலியான கருத்து மலேசியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கடந்த ஜூன் 9 அன்று, அம்னோ இளைஞர் அணி தலைவர் டாக்டர் முகமட் அக்மல் சலே தலைமையிலான குழு, ஜலான் துன் ரசாக்கில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே ஒன்றுகூடி, அவருக்கு எதிராக மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
சிங்கப்பூரை பிறந்த இடமாக கொண்ட ஜோஸ்லின் சியா நீண்ட காலத்திற்கு முன்னர் அமெரிக்கா சென்று, அங்கேயே வசித்து வந்தாலும் அவரின் இந்த கேலி நகைச்சுவை குறித்து சிங்கப்பூர் அரசாங்கம் மலேசியாவிடம் மன்னப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.









