கடந்த ஏப்ரல் மாதம் இங்குள்ள கிளேபாங்கில் உள்ள பல்பொருள் அங்காடியில் டயப்பர்கள் மற்றும் மீன்களை திருடியதாக 38 வயது ஆசிரியர் மீது நேற்று ஈப்போ மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்டவர், மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.புனிதா முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டபோது, தான் குற்றமற்றவர் என்று கூறி, விசாரணை கோரினார்.
குற்றப்பத்திரிகையின் படி, இங்குள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியர், இரண்டு பேக் டயப்பர்கள், தலா 512 கிராம் மற்றும் 432 கிராம் எடையுள்ள இரண்டு சால்மன் மீன் துண்டுகள், ஒரு பாக்கெட் ரெட்ஃபிஷ் (648 கிராம்) மற்றும் ஒரு பாக்கெட் குரூப்பர் (540 கிராம்) ஆகியவற்றை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் மதிப்பு RM243.47 என மதிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று குழந்தைகளின் தந்தையான அவர், ஏப்ரல் 17 அன்று இரவு 7.25 மணியளவில் கெமோர், கிளேபாங்கில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
குற்றவியல் தண்டனைச் சட்டம் பிரிவு 380 இன் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
குறித்த ஆசிரியர் மனநலப் பிரச்சினைகளால் அவதிப்படுவதாகவும், தற்போது இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உயர் இரத்த அழுத்தத்தால் அவதிப்படுவதாகவும், நோயுற்ற பெற்றோருக்கு ஆதரவளிக்கிறார் என்றும், அவரின் வழக்கறிஞர் கூறினார்.
இவ்வழக்கில் நீதிமன்றம் ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM3,000 ஜாமீனை அனுமதித்தது மற்றும் வழக்கை மீண்டும் செவிமடுக்க ஆகஸ்ட் 1 ஆம் தேதியைக் குறிப்பிட்டது.