சிரம்பான்:
அடுத்த மாதம் மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குற்றச்செயல்கள் நடைபெறலாம் என நம்பப்படும் ஆறு இடங்களை நெகிரி செம்பிலான் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அத்தோடு வரும் மாநிலத் தேர்தலில் மொத்தம் 4,400 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர், டத்தோ அஹ்மட் ஜாஃபிர் முகமட் யூசோப் தெரிவித்தார்.
“அதுமட்டுமின்றி, மாநில காவல் படைத் தலைமையகம் புக்கிட் அமானிடம் இருந்து 1,000 பணியாளர்களின் உதவியையும் கட்டம் கட்டமாகப் பெறும்,” என்று அவர் இன்று மாநில காவல்துறை தலைமையகத்தில் நடந்த ஊடக மாநாட்டில் கூறினார்.
மேலும் அரசியல் நிகழ்ச்சிகளை நடத்தும் கட்சிகள் அமைதியான கூட்டச் சட்டம் 2012க்கு மதிப்பளித்து, இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.







