மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் 206 இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு 

மஇகா மேல் முறையீடு செய்யும் 

கோலாலம்பூர், ஜூலை 11-

மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் 206 இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து முறையான பரிசீலனைக்குப் பிறகு கல்வி அமைச்சில் மேல் முறையீடு செய்யப்படும் என்று மஇகா கல்விக் குழுத் தலைவர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் கூறினார்.

வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட 206 மாணவர்களின் மனுக்களை மஇகா கல்விக்குழு பெற்றிருக்கிறது. இவற்றை முழுமையாக ஆய்வு செய்ததில் மீண்டும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் கல்வி அமைச்சிடம் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டு மேல் முறையீடு செய்யப்படும் என்று மஇகா  தேசியக் கல்விக்குழுக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அதன் துணைத் தலைவர் டத்தோ எஸ். ஆனந்தன், செயலாளர் இல. சிவசுப்பிரமணியம், புத்ரா தலைவர் கிஷ்வா அம்பிகாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மேல் முறையீட்டின் வழி வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று கல்விக் குழு நம்புவதாகக் குறிப்பிட்ட நெல்சன், இந்த வாய்ப்பை பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் மஇகா கல்விக் குழுவைத் தொடர்பு கொண்டு விவரங்களை அளித்தால் அவர்களுக்கு உதவுவதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

மேலும் தனியார் பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகள், போலி டெக்னிக் தொழிற்கல்விக் கல்லூரிகள் போன்றவற்றில் இடம் பெற்றுத் தருவதற்கும் மஇகா கல்விக்குழுத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

இதனிடையே முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் காலத்தில் 2,200 மெட்ரிகுலேஷன் இடங்கள் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.  அதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற பக்காத்தான் ஹராப்பான் காலத்தில் அந்த எண்ணிக்கை  குறைக்கப்பட்டது.

அண்மையில் மஇகா தேசியக் கல்விக்குழு நடத்திய தலைமையாசிரியர்கள் கல்வி, ஆய்வுக் கருத்தரங்கை நிறைவு செய்து வைத்துப் பேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம்  2,500 மெட்ரிகுலேஷன் இடங்களை இந்திய மாணவர்களுக்கு வழங்கும்படி மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

அந்தக் கோரிக்கைக்கு இதுநாள் வரையில் பதில் ஏதும் இல்லை என்று தெரிவித்த டத்தோ நெல்சன், மெட்ரிகுலேஷன் கல்வியைக் கற்றுக் கொடுப்பதற்குப் போதிய வசதிகள் வேண்டுமென்றால் மஇகாவின் டேஃப் கல்லூரியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஒரு மாணவருக்கு ஒரு ரிங்கிட் வீதம் அரசாங்கத்திற்கு வழங்குவதற்கு எம்ஐஇடி தயாராக இருப்பதாகவும் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தம்முடைய பரிந்துரையில் குறிப்பிட்டிருந்தார் என்றார்.

இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் மௌனம் காத்து வருகிறார். அண்மையில் இந்த விவகாரம் பரிசீலிக்கப்படும் என்று மட்டுமே அறிவித்திருந்தார். ஆனால் தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here