சிரம்பானிலுள்ள சட்டவிரோத சேமிப்புக் கிடங்கில் அதிரடி சோதனை; RM16,000 மதிப்புள்ள 127 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்!

சிரம்பான்:

நெகிரி செம்பிலான் மாநில உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN), ஜாலான் கோலா சவாவில் (Jalan Kuala Sawah) உள்ள சட்டவிரோத சேமிப்புக் கிடங்கு ஒன்றின் மீது நடத்திய அதிரடிச் சோதனையில், சுமார் 16,000 ரிங்கிட் மதிப்புள்ள 127 திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர்களைப் பறிமுதல் செய்துள்ளது.

‘ஓப்ஸ் திரிஸ் 4.0 பெர்செபாடு’ (Ops Tiris 4.0 Bersepadu) என்ற கூட்டு அமலாக்க நடவடிக்கையின் கீழ் இன்று இச்சோதனை நடத்தப்பட்டதாக நெகிரி செம்பிலான் KPDN இயக்குநர் முஹம்மது ஜாஹிர் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் குறிப்பிட்ட அந்த வளாகத்தைச் சோதனையிட்டபோது, எவ்வித அதிகாரப்பூர்வ அனுமதியுமின்றிச் சட்டவிரோதமாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த 14 கிலோகிராம் (kg) மற்றும் 50 கிலோகிராம் கொள்ளளவு கொண்ட 127 சமையல் எரிவாயு சிலிண்டர்களைக் கண்டறிந்தனர்.

இதுகுறித்து முஹம்மது ஜாஹிர் மஸ்லான் கூறுகையில், “எரிவாயு சிலிண்டர்களுடன் சேர்த்து, இந்த சட்டவிரோத வணிகக் நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக நம்பப்படும் சில முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் அடுத்தகட்ட மேல் நடவடிக்கைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன” என்றார்.

இச்சம்பவம் குறித்து, கட்டுப்பாட்டுப் பொருட்களை முறையான உரிமமின்றிப் பாதுகாப்பில் வைத்திருந்த குற்றத்திற்காக, 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 21-இன் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here