சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள UniKL MIAT ஹங்கரின் ஏப்ரான் பகுதியில், பதிவு எண் 9M-BOF கொண்ட Leonardo S.p.A AW189 ஹெலிகாப்டர், விபத்துக்குள்ளானதை மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மூலம் இயக்கப்படும் ஹெலிகாப்டர் விமானம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக CAAM இன் தலைமைச் செயல் அதிகாரி, கேப்டன் நோராஸ்மான் மஹ்மூட் தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, சுபாங் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரத்திற்கு காலை 11.52 மணிக்கு விபத்து பற்றிய தகவல் கிடைத்தது என்றும், ஹெலிகாப்டரில் பைலட் உட்பட ஏழு பேர் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் நிலையான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
“சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகள் 2016 இன் பகுதி XXVI இன் படி போக்குவரத்து அமைச்சகத்தின் விமான விபத்து புலனாய்வு பணியகம் (BSKU) மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.








