வெள்ள நிவாரணத் திட்டத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக இருவர் கைது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கும் சுமார் 9 இலட்சம் ரிங்கிட் மதிப்பிலான திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என்ற சந்தேகத்தின் பேரில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிலாங்கூர் அலுவலகம் இருவரை கைது செய்துள்ளது.

இன்று காலை ஷா ஆலாம் மாவட்ட நீதிமன்றத்தில் குறித்த இருவரையும் தடுப்புக் காவலில் வைக்குமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தனது ரிமாண்ட் விண்ணப்பத்தை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இன்று தொடங்கி ஜூலை 28 வரை மூன்று நாட்கள் தடுப்புக் காவலில் வைக்குமாறு மாவட்ட நீதிமன்ற நீதிபதி, முஹமட் சயபிக் சுலைமான் ஆணை பிறப்பித்தார்.

ஒரு அறக்கட்டளையின் முன்னாள் செயல்பாட்டு மேலாளரான முதல் சந்தேக நபர், கடந்த ஆண்டு வெள்ள நிவாரண பொருட்களை வழங்குவதற்கு உறவினர் உறவைக் கொண்ட இரண்டாவது சந்தேக நபருக்கு சொந்தமான நிறுவனத்தை பரிந்துரைத்து, தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக நம்பப்படுகிறது.

“30 வயதிற்குட்பட்டதாகக் கருதப்படும் இரண்டு சந்தேக நபர்களும் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சிலாங்கூர் எம்ஏசிசி அலுவலகத்தில் சாட்சியம் அளிக்க ஆஜராகும்படி கேட்கப்பட்டபோது, அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்,” என்று அது தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சிலாங்கூர் எம்ஏசிசி இயக்குநர் டத்தோ அலியாஸ் சலீமைத் தொடர்பு கொண்டபோது, ​​குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதை உறுதிசெய்ததுடன், எம்ஏசிசி சட்டம் 2009ன் பிரிவு 23-ன்படி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டதாகக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here